கருணாநிதியே ஸ்டாலினை நம்பாதபோது, பொதுமக்களாகிய நீங்கள் எப்படி திமுக தலைவர் ஸ்டாலினை நம்புவீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் அம்பத்தூர் பகுதியில் கூறியதாவது;
திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைத்தால் எளிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படும். அதேபோல் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது, மக்களின் எண்ணங்களுக்கு ஒருபோதும் மதிப்பளித்ததில்லை. இதுவரை வாக்குறுதிகள் அளித்த எந்த ஒன்றையும் திமுக நிறைவேற்றவில்லை என்று தெரிவித்த அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் அம்பத்தூர் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.
Read more – பிரதமரின் வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு… ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackModi
முன்னதாக, சென்னை முகப்பேரில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலினை நம்பியது இல்லை. பொதுமக்களாகிய நீங்கள் எப்படி திமுக தலைவர் ஸ்டாலினை நம்புவீர்கள். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உண்மையாக உழைத்தால் எம்எல்ஏ, எம்பியாக ஆகலாம் என்று தெரிவித்தார்.