முதல்வர் குறித்தும் அவரது தாயார் குறித்தும் தவறாக பேசியதற்கு ஆ. ராசா விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி வாக்குப்பதிவு என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த 26 ம் தேதி ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர், ஸ்டாலின் படிப்படியாக வளர்ந்து முதல்வர் வேட்பாளராகவும், நாளைய முதல்வராகவும் வர உள்ளார். அவர் முறையாக பிறந்தவர் என்றும், செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தவர், எனவே அவர் கள்ள உறவில் பிறந்தவர் என்றும் விமர்சித்தார். அதனைத்தொடர்ந்து, திமுக எம்.பி ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதற்கு முதல்வரிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.
இந்தநிலையில், முதல்வர் குறித்தும் அவரது தாயார் குறித்தும் தவறாக பேசியதற்கு ஆ. ராசா விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், அந்த நோட்டீஸில் பெண்களை பற்றி அவதூறாக பேசியது மட்டுமல்லாமல், அவர்களின் தாய்மையை களங்கப்படுத்தும் வகையில் இருந்ததாகவும், இந்த செயலானது தேர்தல் விதிகளுக்கு புறம்பானவை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read more – இன்றைய ராசிபலன் 31.03.2021!!!
இந்த அவதூறு பேச்சு தொடர்பாக ஆ. ராசா இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்ய தவறினால் அவரது பேச்சை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் சார்பில் தன்னிசையாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.