சேலத்தில் வரும் 28 ம் தேதி முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
சேலம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
அதேபோல், நடிகர் கமல் ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது.
இந்தநிலையில், ராகுல்காந்தி- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு சேலத்தில் வருகிற 28 ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read more – இந்த தேர்தல் திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையே நடைபெறும் யுத்தம் : மோதலில் இறங்கும் டிடிவி தினகரன்
இந்த மிகப்பெரிய பொதுக்கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். அதனை தொடர்ந்து, திமுக கட்சி கூட்டணி வைத்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்ற கூட்டணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.