தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
சென்னை :
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க சமூக இடைவெளியும் கடைபிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பல திரை பிரபலங்கள் முதல் பல்வேறு பொதுமக்கள் வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்கு அளித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது இன்று இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி, சென்னை தேனாம்பேட்டை வாக்குச்சாவடியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் ஆழ்வார்பேட்டை தொகுதியிலும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராம் வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
Read more – வாக்களிப்பதற்கு முன்பு குடும்பத்துடன் கருணாநிதி நினைவிடத்தை வணங்கிய முக ஸ்டாலின்…
அதேபோல், சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம், திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமார், சென்னை கீழ்ப்பாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் ஆகியோர் வாக்களித்தனர். போடியில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் தனது வாக்கினை பதிவு செய்தார்.