விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க ஆசைதான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை :
சென்னை அறிவாலயத்தில் 173 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தி மற்றும் வேட்பாளர்களை மாற்றக்கோரி சில இடங்களில் தி.மு.க.வி.னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தி.மு.க. தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், “உன்னுடைய சுற்று வரும்வரை, நீ காத்திருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை அறிந்திருப்பவர்கள்.
அதுபோல், சீட்டு கிடைக்காதவர்கள் பிடிவாதம் பிடிக்க கூடாது. பிடிவாதம் பிடித்தால், நெருக்கடி ஏற்படுத்தினால் அவர்கள் உடன்பிறப்புகள் என்ற தகுதியை இழந்து விடுவார்கள். பிடிவாதம் பிடிப்போரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கேள்விக்குள்ளாகி விடும் என்றார்.
திமுக என்ற பெட்டகத்திலுள்ள உடைகள் அனைத்தும் உயர்ந்தவை, தரமானவை எழில் கூட்டுபவை. அதில் 173 உடைகளை மட்டும் இந்த சட்டமன்ற தேர்தல் களத்திற்கு பயன்படுத்தியுள்ளேன். விருப்ப மனு கொடுத்தவர்கள் அத்தனை பேரையும் வேட்பாளர்களாக அறிவிக்க ஆசைதான். ஆசைகள் கடல்போல் இருந்தாலும் தொகுதிகளின் எண்ணிக்கை கையளவு தான் இருக்கிறது.
வெற்றியன்றி வேறில்லை என்கிற ஒருமித்த சிந்தனையுடன் உழைப்போம். ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வெற்றியினை ஈட்டி கருணாநிதி நினைவிடத்தில் காணிக்கையாக்குவோம் என்று தெரிவித்துள்ளார்.