திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த விவசாயிகள் நிர்வாணமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு நேற்றே கடைசி நாள் என்பதால் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. இதுவரை தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 5,000 திற்கு அதிகமானோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 16 பேர் கொண்ட குழு வருகை புரிந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக வந்தவாசி தாலுகாவை சேர்ந்த சக்கரபாணி, கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய 2 விவசாயிகள் தங்களின் ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக சாலையில் நடந்து வந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடையவே, அருகில் இருந்த காவலர்கள் விரைந்து வந்து, அவர்கள் மீது துணிகளால் போர்த்தி அவர்களை வேட்புமனு தாக்கல் செய்ய செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்களுக்கு ஆதரவாக மற்ற விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபடவே மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
Read more – விருத்தாசலம் மக்கள் எங்கள் உயிரானவர்கள், வெற்றியை தருவார்கள் : பிரேமலதா விஜயகாந்த்
இதுகுறித்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் களம் இறங்கியுள்ளோம். விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் விவசாயிகளின் சட்டை, வேட்டி, துண்டு, கோவணம் போன்றவற்றை உருவி விட்டதால் விவசாயிகள் அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தோம் என்று தெரிவித்தார்.