வேலைவாய்ப்பு தகவல்களை வழங்குதற்காக மட்டுமே கூகுள் நிறுவனம் “கோர்மோ ஜாப்ஸ்” என்ற பிரத்யேக செயலியை அறிமுகம் செய்துள்ளது.

உலக அளவில் தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாகவே வேலைவாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக உள்ளூர் செயலிகள், இணையதளம் முதல் உலக பிரசித்தி பெற்ற நிறுவனமான மைக்ரோசாப்டின் ‘லிங்க்ட்இன்’ நாகுரி, டைம்ஸ்ஜாப்ஸ் உள்ளிட்ட ஏராளமான தளங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது, இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் இணைந்துள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், கூகுள் நிறுவனம் புதிதாக கோர்மோ ஜாப்ஸ் (Kormo Jobs) என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 2018ல் வங்கதேசத்திலும், 2019ல் இந்தோனேஷியாவிலும் இந்த செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் கோர்மோ ஜாப்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தங்களுக்கென ஒரு சுயவிவரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ரெஸ்யூம் உருவாக்கியப் பின், அதற்கு ஏற்ற வேலைகளையும் தேடி பயன்பெற முடியும். இந்த ஆப் மூலம் உங்கள் படிப்பு, வயது, இருப்பிடம், தகுதி உள்ளிட்ட சுயவிவரங்களின் அடிப்படையில் உங்களுக்கான பொருத்தமான ஆரம்ப கட்ட வேலைகளை பெற பரிந்துரை செய்யும் என கூறபடுகிறது. மேலும், துறை சார்ந்த வேலைகளையும் தனியாக தேட முடியும். ஏற்கனவே, கூகுள் இணையதளத்தில் ஜாப்ஸ் என்று தனிப்பிரிவு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இதில் ஜிபே மூலம் பணம் செலுத்தியும் பிரத்யேக வேலைவாய்ப்பு தகவல்களாக பெற முடியும் என தகவல் வெளியாகியுள்ளது.




