கூகுள் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்விக்காக புதிய வசதிகளை தனது கூகுள் லென்ஸ் மூலம் அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது உலகம் முழுவதும் மாணவர்கள் வீடுகளிலேயே கல்வி கற்பதால் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் உதவும் வகையில் அவை வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Socratic எனும் நிறுவனத்தை சமீபத்தில் கூகுள் விலைக்கு வாங்கியிருந்தது. அதில் அறிவியல்,இலக்கியம், சமூக அறிவியல் போன்ற பல பாடங்களை கற்க முடியும். தற்போது கணக்குப் பாடத்தையும் அதில் இணைத்து பல்வேறு சமன்பாடுகளுக்கு தீர்வுகாண வழிவகை செய்துள்ளது. கூகுள் லென்ஸ் செயலி மூலம் இதனை செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கு முதலில் அவர்கள் தீர்க்க வேண்டிய கணித சமன்பாடைப் படம் பிடிக்க வேண்டும். அதை தங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஐ ஒஸ் மொபைலில் உள்ள கூகுள் லென்ஸ் செயலில் பதிவேற்ற வேண்டும். கணக்கின் அடிப்படையை பொறுத்து படிப்படியாக மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். குறிப்பிட்ட சில வழிமுறைகள் ஏன் பின்பற்றப்படுகின்றன என அனைத்து விதமான விளக்கங்களும் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மாணவர்களுக்கும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் உதவும் வகையில் பல புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூகுள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது