தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கணினி துறையில் அடுத்தகட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுவது QUANTUM COMPUTERS. இக்கட்டுரை அந்த எதிர்கால கணினிகள் உண்மையில் எவ்வாறு இயங்கவிருக்கின்றன என்பதற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும் மற்றும் குவாண்டம் கணினி பற்றி நீங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு குவாண்டம் கணினி என்பது உண்மையில் எவ்வாறு இயங்குகிறது?
Quantum Computing. பெயரே கவர்ச்சியானதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில் இது ஒரு அறிவியல் மட்டுமல்லாது மனித இன முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாகவும் இருக்கப்போகிறது. எனவே இதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
வரலாற்று ரீதியில் பார்த்தோமானால் இயற்கையாக நடக்கும் நிகழ்வுகளைப் பயன்படுத்தியே தொழில்நுட்பம் தன்னை கட்டமைத்துக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக 19 ஆம் நூற்றாண்டில், உயர் ஆற்றல் நீர் மூலக்கூறுகள் எனப்படும் High Energy Water Molecules மூலம் இயங்கிய நீராவி என்ஜின்கள் – தொழில் புரட்சியை உண்டாக்கியது. 20 ஆம் நூற்றாண்டில், எலக்ட்ரான்(electron)கள் மின்னணுத்(electronics) துறையால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 21 ஆம் நூற்றாண்டில் தகவல் செயல்பாடுகளை வேகமாக்க பொருட்களின் குவாண்டம் பண்புகளைப் பயன்படுத்துவோம்.
குவாண்டம் கம்ப்யூட்டிங் (Computing) என்பது பெரும்பாலும் நாம் தற்போது பயன்படுத்தும் கணிணி தொழில்நுட்பத்திற்கு இன்னும் வேகத்தை அளிக்கும் என்றே கருதப்பட்டு வருகிறது. நம் கணினி இன்னும் சற்று வேகமாக இயங்கும் என்றே நினைத்துக் கொள்கிறோம். ஆனால் அது தவறானது. Quantum Computingன் தனித்தன்மை என்பது குறிப்பிட்ட சில பணிகளை மட்டும் அதிவேகமாக செய்யும் திறன் பெற்றுள்ளது தான். மிகவும் குழப்பமான மற்றும் முற்றிலும் புதிய முறையில் அந்த தொழில்நுட்பம் இயங்குவதால் தான் குவாண்டம் கணினி தனிச் சிறப்பு பெறுகிறது.
அடுத்து வரவிருக்கும் பகுதிகளில் குவாண்டம் கணினியின் வரலாறு, எதிர்காலம்,QBit என்றால் என்ன? எவ்வளவு வேகத்தில் இயங்கும்? என்பது போன்ற பல தகவல்களை பார்க்கலாம்.