பப்ஜி விளையாட்டை முறைகேடாக விளையாடிய 22 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை, ஒரே வாரத்தில் அந்நிறுவனம் தடை செய்துள்ளது.
ஆன்லைன் கேம்கள் தொடர்ந்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் இடையேயும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பப்ஜி விளையாட்டு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கொரோனா ஊரடங்கு அதன் பயன்பாட்டை பொதுமக்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. மேலை நாடுகளில் உருவாக்கப்பட்ட கேம் ஆனாலும், ஆசிய நாடுகளிலேயே இதற்கு அதிகப்படியான வாடிக்கையாளர்கள் காணப்படுகின்றனர். பள்ளி சிறுவர்கள் முதற்கொண்டு பலர் இதற்கு அடிமையாகவே மாறியுள்ளனர்.
இந்நிலையில், பப்ஜி ஆன்லைன் கேமில் முறைகேடாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஆகஸ்ட் 20 முதல் 27ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் மட்டும், 14 லட்சத்து 24,854 சாதனங்களில் இருந்து 22 லட்சத்து 73,752 பப்ஜி கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட சாதனங்களில் இருந்து இனி ஒருபோதும் பப்ஜி கேமை விளையாட முடியாது.
தடை செய்யப்பட்டவர்களில் 12% பேர் ஸ்பீட் சீட்டிங் பயன்படுத்தியதாகவும், 27% பேர் ஆட்டோமோட் பயன்படுத்தியதாகவும், 32% பேர் எக்ஸ்-ரே விஷன் மற்றும் 22% பேர் மற்ற காரணங்களுக்கவும் பயன்படுத்தியதாக தடை செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ஆன்லைன் தொடரின் போது, மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.