காலநிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறை உருகியதில் 48,500 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியின் கீழ் உறைந்து கிடந்த கிட்டத்தட்ட இரண்டு டஜன் வைரஸ்கள் புத்துயிர் பெற்றதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள நிரந்திரமாக உறைந்து கிடந்த ஏரியில் இருந்து சேகரிக்கப்பட்ட பண்டைய மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் “ஜாம்பி வைரஸ்கள்” என்று அழைக்கப்படும் 13 புதிய நோய்க்கிருமிகளுக்கு புத்துயிர் அளித்து வகைப்படுத்தினர். அவை உறைந்த நிலத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக சிக்கியிருந்தாலும் அவை தொற்றுநோய் பரப்பும் தன்மையை இப்போதும் கொண்டிருப்பதை கண்டறிந்தனர்.
வளிமண்டல வெப்பமயமாதல் காரணமாக பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உரைதலில் இருந்த பனிப்பாறைகள் உருகுவதால், அதில் இருந்து மீத்தேன் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறி காலநிலை மாற்றத்தை மேலும் மோசமாக்கும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். ஆனால் அதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்ல கிருமிகள் வெளியேறும் ஆபத்து குறித்து தற்போது எச்சரித்து வருகின்றனர்.
ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, பனியில் கிடைத்த கிருமிகளை ஆய்வுக்காக உயிர்ப்பிக்க அதிக சிரமம் எடுக்க வில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் பொருள் அது எவ்வளவு காலம் ஆனாலும் சாதாரண நிலையிலேயே எளிதாக உயிர்பித்துக் கொள்ளும் திறன் பெற்று இருக்கிறது. அப்படி உயிர்ப்பித்துக் கொண்டால் விலங்குகள் அல்லது மனிதர்களை சீக்கிரம் தாக்கிவிடும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தனர்.
ஆய்வாளர்கள் குழு பண்டைய பெர்மாஃப்ராஸ்ட் உருகுவதால் அறியப்படாத வைரஸ்கள் வெளியேறும் ஆபத்துகள் குறித்து bioRxiv கட்டுரையில் எழுதினர். அது இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. இந்த வைரஸ்கள் வெளிப்புற நிலைமைகளுக்கு ஒருமுறை வெளிப்பட்டால் எவ்வளவு காலம் உயிர்த்து இருக்கும், இடைவெளியில் அவை பொருத்தமான ஹோஸ்டைச் சந்தித்து எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.