திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களில் முக்கிய பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்களை கொண்டு வருபவர்கள் ஆகியோருக்கு சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தலா 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் காலை 8 மணிக்கு தூவங்கி பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் இலவச தரிசனத்திற்காக இரவு முழுவதும் காத்திருப்பு மண்டபத்தில் அடைபட்டு இருக்கும் பக்தர்கள் அதிகாலை நேரத்தில் ஏழுமலையானை வழிபட இயலும் என்றும், தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா 10000 ரூபாய் நன்கொடை வழங்கி 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்கள் இனிமேல் நாளை 30 ம்தேதி முதல் திருப்பதியில் உள்ள மாதவம் விருந்தினர் மாளிகை கவுண்டரில் டிக்கெட்டுகளை பெற்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.