பிரசவத்தின் போது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த பெண்ணுக்கு ₹10லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தணியை சேர்ந்த பாலாஜி என்பவரின் மனைவி குபேரி, கடந்த 2008ம் ஆண்டு பிரசவத்திற்காக, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது வயிற்றில் கத்தரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கத்தரிக்கோல் அகற்றப்பட்டது.
இதையடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் பாலாஜி முதல்வரின் தனிப்பிரிவுக்கு இமெயில் மூலம் புகார் அளித்தார். இது சம்மந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தது. விசாரணையில், மருத்துவர்கள் அஜாக்கிரதையாக இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. குபேரி 12வருடங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ₹10 லட்சம் இழப்பீட்டை தமிழக அரசு 4வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.




