நியூயார்க், அமெரிக்காவின் வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு ஆண்டில் அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் பறவை காய்ச்சலுக்கு, முதன்முறையாக 5 கோடியே 5 லட்சத்து 40 பறவைகள் உயிரிழந்து உள்ளன. அவற்றில் பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பறவைகளும் அடங்கும்.
கோழிகள், வான்கோழிகள் மற்றும் பிற பறவைகளின் உயிரிழப்பு, இந்த நாள் வரையில் அமெரிக்காவில் மிக மோசம் வாய்ந்த விலங்கு சுகாதார பேரிடராக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு, 2015-ம் ஆண்டில் பறவை காய்ச்சலுக்கு 5 கோடியே 5 லட்சம் பறவைகள் உயிரிழந்து இருந்தது அதிக அளவாக இருந்தது.
அதனை இந்த பாதிப்பு எண்ணிக்கை முறியடித்து உள்ளது. இதன்படி, பறவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட பின்பு அவை உயிரிழக்கின்றன. முட்டையிடும் கோழி பண்ணைகளில் ஒரு கோழிக்கு பாதிப்பு உறுதியானால் அதில் உள்ள 10 லட்சம் கோழிகளும் அழிக்கப்படும். இதுபோன்ற அழிவுகளால், கோழி முட்டைகள் மற்றும் கோழிகளின் விலை அதிகரித்தது. நுகர்வோர்களுக்கு பொருளாதார வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், கடந்த வியாழ கிழமை அமெரிக்காவில் நடந்த நன்றி தெரிவிக்கும் கொண்டாட்டங்களில் நுகர்வோர் பெரிதும் பாதிப்படைந்தனர். அமெரிக்காவில் பறவை காய்ச்சல் கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. பின்னர் 46 மாகாணங்களில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. வான்கோழி பண்ணைகள் 70 சதவீதத்திற்கும் கூடுதலான அளவுக்கு காய்ச்சல் பாதிப்புகளை எதிர்கொண்டன என அந்த அறிவிக்கை தெரிவிக்கின்றது.