கொரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார், 20 லட்சம் பேர் உயிரிழக்க கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், மனித உயிரின் பெரும் எதிரியாக மாறியுள்ளது. இதுவரை, இந்த நோய்த்தொற்றால் 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகளின் பொருளாதாரம் மொத்தமாக சரிந்து, கோடிக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனிடையே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 150 நாடுகள் ஈடுபட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மற்ற நாடுகள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், அடுத்த 9 மாதங்களுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛ தடுப்பூசி தயாரிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொரோனா மிகப் பெரிய சவால். வெற்றிகரமாக கொரோனாவிற்கான தடுப்பூசியை பரவலாக பயன்படுத்துவதற்கு முன்னதாகவே நோய்த் தொற்றால் உலகம் முழுவதும் 20 லட்சம் உயிரிழப்புகளை எட்டக்கூடும். மேலும், தொற்றுநோயைத் தடுப்பதற்கு உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லையென்றால், உயிரிழப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம், என அறிவுறுத்தி உள்ளார். உலக சுகாதார அமைப்பின் இந்த கருத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.