6 வயது சிறுவன் ஒருவன் ஆன்லைனில் கேம் விளையாடுவதற்காக தனது அம்மாவின் வங்கிக்கணக்கில் இருந்து 11 லட்சம் அபேஸ் செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் கனக்டிகட் மாகாணத்தின் வில்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெஸிக்கா. இவருக்கு ஜியார்ஜ் ஜான்சன் எனும் 6 வயது சிறுவன் உள்ளான். கொரோனா ஊரடங்கு காரணத்தால் ஜெஸிக்கா வீட்டில் இருந்து வேலை செய்து வந்துள்ளார். இதனால், ஜியார்ஜ் தனது அம்மாவின் ஆப்பிள் ஐபேடில் கேம் விளையாடி வந்துள்ளான். தனக்கு தொந்தரவு தராமல் மகனும் கேம் விளையாடுவதால் ஜெஸிக்கா இதைபற்றி பெரிதாக எதும் எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் சிலநாட்களில் ஜெஸிக்கா வங்கிக்கணக்கில் இருந்து 1.99 டாலர் பணம் குறைந்தது. இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர் தனது அன்றாட பணிகளில் மூழ்கிவிட்டார். அதன்பின் அடுத்தடுத்த சிலநாட்களில் அதிகளவில் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருந்ததை கண்ட ஜெஸிக்கா இது ஆன்லைன் திருட்டாக இருக்கும் என சந்தேகித்து புகாரளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி ஆன்லைன் கேமில் Add-on வாங்குவதற்காக அவரது மகன் ஜியார்ஜ் ஜூலை மாதம் முதல் இதுவரை 16 ஆயிரம் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11 லட்ச ரூபாய் செலவளித்திருப்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெஸிக்கா இதுகுறித்து மகன் ஜியார்ஜிடம் தெரிவித்துள்ளார். இதை அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுவிட்டு அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாக ஜியார்ஜ் கூலாக தெரிவித்துள்ளானாம்.