நாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி மற்றும் அவரின் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 196 நாட்களுக்கு பின் பூமிக்கு பத்திரமாக திரும்பியுள்ளார்கள்.
நாசாவில் பணிபுரியும் கிறிஸ் கேசிடி மற்றும் அவரது குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி விண்வெளிக்குப் பயணமானார்கள். அவரது குழுவில் ரஷ்ய விண்வெளி வீரர்களான இவான் வாக்னர் மற்றும் அனடோலி இவானிஷின் ஆகியோரும் இருந்தனர்.
அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் எஸ்படிஷன் 63 எனும் பிரிவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தக் காரணத்தால், கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 15 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்ட பின்னரே பயணம் மேற்கொண்டனர் விண்வெளி வீரர்கள்.
இந்நிலையில் கிட்டத்த ஆறரை மாதங்கள் விண்வெளியில் வசித்து, தற்போது பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்தக் குழுவினர். பூமிக்குத் திரும்புவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின்போது பெரும் சிக்கல்களை சந்தித்தனர். ஆனால், அவை எல்லாவற்றையும் மேற்கொண்டு, பூமிக்கு திரும்புயுள்ளனர். இவர்களை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர் விஞ்ஞானிகள்.
மேலும், இவர்கள் விண்வெளியில் இருக்கையில் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின்போது, அங்கிருந்து எடுக்கப்பட்ட படங்களைப் பகிர்ந்திருந்தார் கிறிஸ் கேசிடி. அந்தப் படங்களை நாசா பகிர்ந்தது. அந்தப் படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
196 நாட்கள் விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றிய விண்வெளி வீரர்கள், நேற்று இரவு 7:32 மணிக்கு விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு, கஜகஸ்தான், டிஜெஸ்கஸ்கன் பகுதியில் தெற்கே, இரவு 10:54 (அந்நாட்டு நேரப்படி காலை 8:54) மணிக்கு தரையிறங்கினார்கள்.