சீன அதிபரும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான ஜி ஜின்பிங் பதவி காலம் மேலும் 15 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2012-ல் 10 ஆண்டுகளுக்கு சீன அதிபராக பொறுப்பு ஏற்றார். இவரது ஆட்சிகாலத்த்தில் தான் அண்டை நாடுகள் உடனான மோதல் போக்கு அதிகரித்து உள்ளது. மேலும், ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து, பொதுவெளியில் ஒரு கருத்தையும், திரை மறைவில் சுயலாபத்துடனும் செயல்படுவதையே இவர் வழக்கமாக கொண்டுள்ளார். லடாக் எல்லை பிரச்னை விவகாரத்திலும், இதையே அவரது அரசு கடைபிடித்து வருகிறது. இதனால், இந்தியா மட்டுமின்றி பல அண்டை நாடுகளுக்கும் சீன தலைவலியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் மத்தியக்குழு உறுப்பினர்கள் அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, சிறந்த ஆளுமையை கொண்டு இருப்பதால் சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த 15 ஆண்டுகளுக்கு சீனாவின் அதிபராக நீடிக்க மத்தியக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பால், ஜி ஜின் பிங் அவரது 82வது வயது வரையில் அதிபராக இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் பதவி தவிர கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர், ராணுவத்தின் தலைமை பதவி ஆகியவற்றையும் ஜி ஜின்பிங் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 14-வது ஐந்தாண்டு திட்டத்திற்கும் (2021- 2025) ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஏற்றுமதியை அதிகமாக நம்பி இருக்காமல் உள்நாட்டு நுகர்வு மூலம் நாட்டின் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இந்த ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.