ஐபோன் வாங்குவதற்காக கள்ளச்சந்தையில் தனது கிட்னியை விற்ற இளைஞர், உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்பு அம்சங்களுடன் சர்வதேச அளவில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இதனால், இளைஞர்கள் உட்பட பலருக்கும் ஐபோன் வாங்குவது என்பது கனவாக உள்ளது. ஆனால், ஐபோனின் விலை தான் அதனை வாங்க வேண்டும் என்னும் கனவிற்கு பெரும் தடையாக உள்ளது.
சிலர் இந்த போன்களை வாங்குவதற்காக தன்னுடைய வீடு, கார் உள்ளிட்டவைகளை விற்று, அதன்மூலம் ஐபோன் வாங்கியுள்ளனர். ஆனால், நடுத்தர மக்களுக்கு இந்த போன் இன்று வரை பெரும் கனவாகவே உள்ளது. கிட்னியை விற்றாவது ஐபோன் வாங்கவேண்டும் என கூறுவது போல மீம்ஸ்கள், ஜோக்குகளை பார்த்துள்ளோம். ஆனால், அது உண்மையாகவே சீனாவில் அரங்கேறியுள்ளது.
அந்நாட்டின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் வாங் ஷாங்கன், எப்படியாவது ஐபோன் வாங்க வேண்டும் என பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வந்துள்ளார். தனது 17வது வயதில் எதிர்பாராத விதமாக ஆன்லைன் உரையாடலின் மூலம் கள்ளச் சந்தையில் கிட்னியை விற்பது குறித்து அறிந்துள்ளார். அதன்படி, அறுவை சிகிச்சை மூலமாக தனது ஒரு கிட்னியை விற்றுள்ளார்.
அமெரிக்க மதிப்பில் 3,273 டாலர் விலைக்கு தனது கிட்னியை விற்ற இளைஞர், அந்த பணத்தில் ஐபாட்-2 மற்றும் ஐபோன்-4 வாங்கியுள்ளார். அந்த சூழலில், ‘எனக்கு எதற்கு இரண்டு கிட்னிகள்? உயிர் வாழ ஒரு கிட்னி போதும்,’ என ஷாங்கன் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், ஒரு கிட்னியுடன் வாழ்ந்து வந்த ஷாங்கனுக்கு, அடுத்த சில மாதங்களில் அந்த கிட்னியும் தொற்று மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகான பராமரிப்பு இல்லாமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாங்கன் உடல்நிலை மோசமடைந்தது. இதனை கவனித்த அவரது தாயார் அவரிடம் விசாரித்ததில் விவரத்தை அறிந்து கொண்டுள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்பிள் ஐபோனுக்கு ஆசைப்பட்டு கிட்னியை விற்ற ஷாங்கன், தற்போது படுத்த படுக்கையாக தினந்தோறும் டயாலாசிஸ் செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.