பொம்மையின் உதவியுடன் தாயின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுவனின் செயலுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இங்கிலாந்தின் வெஸ்ட் மெர்சியா காவல்துறை சார்பில், கடந்த மாதம் நிகழ்ந்த சம்பவம் எனக் குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பதிவில், ஜோஷ் என்ற 5 வயதான சிறுவனின் அம்மா வீட்டில் திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது வீட்டில் இருந்தது ஜோஷும் அவரது சகோதரரும் மட்டும்தான்.
ஆனால், அந்த சமயத்தில் ஜோஷ், எந்த நேரத்தையும் வீணாக்காமல், ஐரோப்பாவில் அவசரகால சேவைகளுக்கான தொடர்பு எண்ணான 112-க்கு போன் செய்து தனது தாயின் உடல்நிலை குறித்து எடுத்துரைத்து உதவி கோரியுள்ளார்.
இது அவரது தாய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை பெற உதவியது. இந்த சம்பவத்திக் ஆச்சரியம் என்னவென்றால், ஜோஷ் தனது பொம்மை ஆம்புலன்சில் இடம்பெற்றிருந்த 112 என்ற என்னை கண்டே மருத்துவ சேவைக்கான உதவியை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனின் இச்செயலை ஆச்சரியத்துடன் பாராட்டிய டெல்ஃபோர்டு உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜிம் பேக்கர், ”சிறுவனின் செயல் ஒரு நம்பமுடியாத விஷயம். ஜோஷ் பதட்டமடையாமல் மிகவும் தைரியமாக இருந்தார். அவரது முழு சிந்தனையும் தனது அம்மாவை காப்பாற்றும் மனநிலையிலேயே இருந்தது என்பது, இந்த வயதில் இவ்வளவு மனத்தைரியம் உண்மையில் அசாதாரணமானது. எதிர்காலத்தில் ஜோஷ் ஒரு சிறந்த போலீஸ் அதிகாரியாக வருவார் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
சமயோஜிதமாக செயல்பட்ட சிறுவன் ஜோஷின் இச்செயலுக்காக பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.