இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றிபெற 90% வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் ஊழல் புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் 11 பேர் களம் இறங்கினர். இறுதிநேரத்தில் 3பேர் வாபஸ் பெற்றனர். இதனால், போட்டியாளர்களின் எண்ணிக்கை 8ஆக குறைந்தது. ஒவ்வொரு போட்டியில் இருந்தும் ஒருவர் வெளியேற்றப்பட்ட நிலையில் இறுதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் களத்தில் உள்ளனர். ஆகஸ்டு முதல் செப்டம்பர் 5ம் தேதிக்குள் 1 லட்சத்திற்கும் அதிகமான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், இவர்கள் இருவரில் ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த நிலையில், யூகவ் என்ற அமைப்பு நடத்திய ஆய்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், 19%வாக்குகள் வித்தியாசத்தில் ரிஷி சுனக்கை, லிஸ்டிரஸ் வெற்றிபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(ரிஷி சுனக் 31%,லிஸ்டிரஸ் 49%) மேலும், 15% உறுப்பினர்கள் எப்படி வாக்கு செலுத்துவார்கள் என தெரியவில்லை. 6% வாக்காளர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ஸ்மார்கெட்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில், லிஸ் டிரஸ் 89.29% வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
-பா.ஈ.பரசுராமன்.