மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சாலி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தியா, மாலத்தீவு இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
500 மில்லியன் டாலர்கள் செலவில் இந்தியாவால் நிதி அளிக்கப்பட்ட கிரேட்டர் மாலே இணைப்புத் திட்ட பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் மாலத்தீவின் மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் தலைநகர் மாலேவை வில்லிங்கிலி, குல்ஹி பல்ஹூ மற்றும் திலா புஷி ஆகிய தீவுகளுடன் இணைப்பதை நோக்கமாக கொண்டதாகும். 6.74 கி.மீ நீளத்திற்கு பாலம் மற்றும் தரைப்பால இணைப்பு கட்டப்படும். இது குல்ஹி பல்ஹூவில் ஒரு துறைமுகம் உருவாக்க உதவும் என்றும் மாலேயின் நெரிசலை குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது இந்தியா, மாலத்தீவின் நட்புறவு சின்னமாக விளங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
-பா.ஈ.பரசுராமன்.




