ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மர் நாட்டின் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தது. இந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங் சான் சூகிக்கு ராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

77 வயதாகும் ஆங் சான் சூகி நோபல் பரிசு பெற்றவர். ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர். இவர் மீது ஊழல், தேர்தல் விதிமீறல்கள் என 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவதற்காக அவர் நிறுவிய டான் கின் கீ பவுண்டேசனில் இருந்து ஒரு வீட்டை கட்டுவதற்கும், அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை தள்ளுபடி விலையில் குத்தகைக்கு எடுத்ததற்கும் நிதியை தவறாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக்கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இந்த தண்டனை அநியாயமானது அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




