திருச்சி,கோவையில் இருந்து துபாய்க்கு விமானசேவை தொடங்க தயாராக இருப்பதாக துபாய் விமான போக்குவரத்து இயக்குநர் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, திருவனந்தபுரம் ஆகிய 9 நகரங்களுக்கு விமான சேவை இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேசுவர், கவுகாத்தி, புனே ஆகிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க துபாய் தீவிரம் காட்டி வருகிறது.
இதுதொடர்பாக விமான போக்குவரத்து ஆணைய இயக்குநர் முகமது அலி இந்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், துபாயில் இருந்து இந்தியாவிற்கு வாரத்திற்கு 183 விமான சேவை இருந்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்தியா-துபாய் இடையே விமான சேவை நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. சரக்கு விமான போக்குவரத்து மூலம் இரண்டு நாடுகளுக்கும் நல்ல லாபம் கிடைத்து வருகிறது.இதனால் இந்தியாவுக்கு மேலும் விமான சேவை தொடங்க துபாய் ஆர்வமாக உள்ளது. வாரந்தோறும் 50 ஆயிரம் இருக்கைகளை அதிகரிக்க உள்ளோம். விமான சேவைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக இந்தியா பரீசிலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




