நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும், அது எனது உரிமை எனவும் பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சோனரோ தெரிவித்துள்ளார். இவரின் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகளவில் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முனைப்புடன் உலகின் பல்வேறு நாடுகள் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
சில நாடுகள் தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்தி, முடிவுக்காக காத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று பல நிறுவனங்களும், உலகின் பல முன்னணி நாடுகளும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரேசில் நாட்டின் அதிபர் ஜேயிர் போல்சோனாரோ, தான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை எனவும், அது தனது உரிமை எனவும் தெரிவித்துள்ளார். பிரேசில் நாட்டு அதிபரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
ஏற்கனவே, அதிபர் போல்சோனாரோ கொரோனா வைரஸ் ஒரு சிறிய காய்ச்சல்தான். அதற்கு மாஸ்கும் தேவையில்லை, ஊரடங்கும் தேவையில்லை என பேசியது, உலகளவில் சர்ச்சையானது. அதுபோல அவர் பொது இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் முகக்கவசம் அணியாமல் தான் செல்வார். இந்நிலையில், அவருக்கு கடந்த ஜூலை 10-ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. பின்பு, சிகிச்சை முடிந்து முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பியதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் இதுவரை மொத்தமாக 62,38,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,71,998 உயிரிழந்துள்ளனர். அதன்படி, கொரோனா பாதிப்பில் உலகளவில் மூன்றாம் இடத்திலும், இறப்புப் பட்டியலில் உலகளவில் இரண்டாம் இடத்திலும் பிரேசில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டின் அதிபரே, கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப் போவதில்லை என பேசியிருப்பது, பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு பலரும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.