இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் அடுத்த 90 நாட்களில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், டிக் டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவன அதிகாரி கெவின் மேயர் தீடிரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சீன – இந்திய எல்லை மோதலின் எதிரொலியாக இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை விதித்தது. இதனையடுத்து தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமெரிக்காவிலும் வீ சாட் மற்றும் டிக் டாக் செயலியை தடை செய்வதாக அமெரிக்க அரசு அறிவித்தது. அடுத்த 90 நாட்களில் இந்த செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் இந்நிறுவனம் சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக்கூடும் என அமெரிக்க அரசு அறிவித்து இருந்த நிலையில் அதன் தாய் நிறுவனமான பைட்டு டான்ஸ் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என எச்சரித்த நிலையில் பைட்டு டான்ஸ் அமெரிக்க நீதிமன்றங்களில் டிக் டாக் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் டிக் டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். அவர் ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் தான் ஒரு கனத்த இதயத்தோடு இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக உருக்கமாக பகிர்ந்துள்ளார்.