இந்தியா-சீனா எல்லை பிரச்சனைக்கு இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்:
இந்தியா-சீனா எல்லையிலுள்ள கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட அதை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா – சீனா இடையே கடந்த 1962- ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தியா- சீனா இடையேயான எல்லைப் பிரச்சினையில் இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் இந்த எல்லை பிரச்சனை குறித்து பேசுகையில், “ இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது . சீன ராணுவம் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செயல்படுகிறது . சீனா – இந்தியா ஆகிய இருநாட்டு எல்லைப் பிரச்சனையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது குறித்து பேசி வருகிறோம்” என்றார்.
இந்தியாவிடம் சீனா அத்துமீறலில் ஈடுபடுகிறதா? என ட்ரம்பிடம் கேள்வி கேட்டப்போது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், இல்லை என்று நம்புகிறேன். ஆனால் சீனா நிச்சயமாக பிரச்சனையை முன்னெடுக்கிறது என்றும் ,நிறைய பேர் புரிந்துகொள்வதை விட அவர்கள் மிகவும் வலுவாக இயங்குகிறார்கள் ” என்றார்.




