21ம் நூற்றாண்டில் இளைய தலைமுறையினர் உள்பட அனைத்து தரப்பினரின் அன்றாட பொழுதுபோக்கு மட்டுமின்றி, பயன்பாட்டு சாதனமாகவும், தொழில் செய்யும் இடமாகவும் சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என பல்வேறு சமூக வலைத்தளங்கள், மக்களின் வாழ்க்கையில் இரண்டற கலந்து விட்டன. இது இளைஞர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் இது தொழில் இடமாகவும் மக்களுக்கு உள்ளதால் வருமானம் தரும் விஷயமாகவும் சமூக வலைத்தளங்கள் உள்ளன. இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில், இந்த சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இந்தியா உள்பட பல நாடுகளில், பேஸ்புக் மற்றும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் திடீரென மணிக்கணக்கில் முடங்கின. இதுகுறித்த மீம்களும் ட்விட்டர் தளத்தில் அதிகரித்தன.
முடங்கிய சமூக வலைதள பக்கம் காரணமாக பயனாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 6 மணி நேர முடக்கத்துக்கு பின்னர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தன. இன்று காலை 3 மணி முதல் இவை பயன்பாட்டிற்கு வந்தன.
இதனிடையே, பேஸ்புக் நிறுவனத்தின் 6 மணி நேர முடக்கத்தால், அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்கிற்கு 52 ஆயிரத்து 217 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில், பில்கேட்ஸுக்கு அடுத்த இடத்திற்கு, அதாவது 5-வது இடத்திற்கு மார்க் சூகர்பெர்க் தள்ளப்பட்டுள்ளார்.
நேற்று ஒரு நாளான திங்கள் கிழமை மட்டும் பங்கு சந்தையில் 4 புள்ளி 9 சதவீதம் அளவுக்கு, பேஸ்புக் நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன. செப்டம்பர் பாதிக்குப் பிறகு, அந்நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன. மார்க் சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 10 லட்சத்து 44 ஆயிரத்து 351 கோடி ரூபாயில் இருந்து, 9 லட்சத்து 7 ஆயிரத்து 93 கோடி ரூபாயாக வீழ்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.