கனடாவில், 9 வயது மகனின் கண் முன்பே, கரடியால் தாக்கப்பட்டு தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள சாஸ்கட்சூவான் என்ற பகுதியில் உள்ள மர வீட்டில், ஸ்டெஃப்னி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதற்காக வந்துள்ளார். 44 வயதான ஸ்டெஃப்னி ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று, ஸ்டெஃப்னி தனது தந்தையுடன் ஹூபர்ட் உடன் செயற்கைக்கோள் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார். தண்ணீர் குழாயில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தனது கணவர் சரி செய்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பின்பு சிக்னல் சரியாகக் கிடைகாததினால், தனது 9 வயது மகனான எலியிடம், ஆன்டெனாவை எடுத்து வருமாறு சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையில், வீட்டுக்குள் ஆன்டெனாவை எடுக்க சென்ற மகனுக்கு, ஏதோ வித்தியாசமான சத்தம் கேட்கவே திரும்பிப் பார்த்தபோது, அங்கே கரடி ஒன்று தன் தாயை தாக்குவதை பார்த்து பயத்தில் திகைத்துப்போய் நின்றிருக்கிறான். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள்ளாகவே, மகன் கண் எதிரிலேயே தாய் உயிரிழந்துள்ளார்.
இதுக்குறித்து ஸ்டெஃப்னியின் தந்தை ஹூபர்ட் தெரிவிக்கையில், தனது மருமகனுக்கு கரடிகளை சமாளிக்க பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததாகவும், அன்று மிளகு தெளிக்கும் ஸ்ப்ரே வேலை செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதனால் கரடியை ஒரு முறை சுட்டுள்ளார். ஆனாலும் அது சாகவில்லை. எனவே இன்னொரு முறை சுட்டபோது தான் அது இறந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்துப் சாஸ்கட்சூவான் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக 1983-ஆம் ஆண்டு இது போல ஒரு சம்பவம் நடந்ததாகவும், அதன் பின்பு தற்போது தான் இதுபோல ஒரு கரடி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர்.