ஆப்கானிஸ்தானில் 2 ராணுவ வீரர்கள் சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காபூல் :
ஆப்கானிஸ்தான் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்றில் 14 ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முகாமில் இருந்த 2 ராணுவ வீரர்கள் திடீரென தங்களது சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
திடீரென நடந்த இந்த எதிர்பாராத தாக்குதலால் மற்ற சக வீரர்கள் சுதாரிப்பதற்குள் அந்த 2 வீரர்களும் அவர்களை சுட்டு வீழ்த்தினர். இதில் 12 ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அந்த 2 வீரர்களும் தங்களது சக வீரர்களிடம் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் எடுத்து சென்றுள்ளனர்.
இதேபோல், கடந்த 6 ம் தேதி ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில் ராணுவ சோதனைச்சாவடி ஒன்றில் பணியில் இருந்த ஒரு ராணுவ வீரர் தனது சக வீரர்கள் 7 பேருக்கும் உணவில் விஷத்தை கலந்து கொன்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. தப்பி சென்ற அந்த 2 நபருக்கு ஏதேனும் ஒரு தீவிரவாதிகள் அமைப்புகளுடன் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது.