இந்தோனேசியாவில் சவப்பெட்டி தொழில் செய்யும் ஒருவர் வீட்டிற்குள் விழுந்த விண்கல்லால், ஒரே இரவில் அவர் கோடீஸ்வரராக மாறிய சுவாரசியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள கோலாங்க் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசுவா ஹுடகலுங். 33 வயதாகும் ஜோசுவா, சவப்பெட்டி செய்யும் தொழில் செய்து வருபவர்.
அன்றும் வழக்கம் போல் வீட்டில் சவப்பெட்டியை செய்து கொண்டிருக்கும் போது, அறையின் கூரை வழியாக விண்கல் ஒன்று வந்து விழுந்துள்ளது. சுமார் 2.1 கிலோ எடையுள்ள அந்த விண்கல் கூரை வழியாக மோதி, வீட்டினுள் 15 செ.மீ ஆழத்தில் மண்ணில் புதைந்துள்ளது. இதில் விட்டின் கூரை பலத்த சேதம் அடைந்துள்ளது.
இதுக்குறித்து, ஜோசுவா கூறும்போது, முதலில் அந்த விண்கல் சூடாக இருந்தது. அதை அப்படியே நான் நிலத்திலிருந்து எடுக்க முயன்றபோது ஓரளவு சேதமடைந்தது. அதை நான் எடுத்ததும் வீட்டில் இருந்த அனைவரிடமும் காண்பித்தேன். அந்த விண்கல் வந்து விழுந்தப் போது அதிக சத்தமாக இருந்தது என்றார்.
மேலும், இந்த விண்கல் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை வைத்து ஒரு தேவாலயத்தை கட்ட விரும்புவதாகவும், தனக்கு ஒரு மகள் வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இதன் மூலம் நிறைவேற போவதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதுபோன்ற அரிதான பாறை வகைகள் கிராம் ஒன்றுக்கு 1,000 டாலர் வரை விற்பனைக்கு வருகின்றன. இந்த விண்கல் குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இது சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வகையிலான விண்கல்லின் மதிப்பு சுமார் கிராம் ஒன்றுக்கு 1000 டாலர் வரை இருக்கும் என்று தெரிகிறது.
தற்போது அந்த விண்கல்லிற்கு ரூ.10 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் எடை மற்றும் தரத்தின் அடிப்படையில் அதன் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விண்கல்லானது, அவரது 30 வருட சம்பாத்தியத்தை ஒரே இரவில் கொடுத்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்னும் வழக்கச் சொல், அவரது வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை கேள்விப்படும் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.