அடுத்த ஆண்டு மத்திய பகுதி வரை கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புகள் குறைவு என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
மனித உயிர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும், கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள பல நாடுகளும், பல கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி உள்ளிட்டவை மீது உலக நாடுகள் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளன. இதனிடையே, ரஷிய கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடரபாளர் மார்கரெட் ஹாரிஸ், தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு மத்தியப்பகுதி வரை கொரோனாவுக்கு எதிராக பரவலான தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் எதிர்பார்க்கவில்லை.
மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் தடுப்பூசிகள் எதுவும் இதுவரை உலக சுகாதார அமைப்பால் கோரப்பட்ட, குறைந்தது 50% அளவு செயல்திறனின் “தெளிவான சாதகங்களை” நிரூபிக்கவில்லை என்றார்.
“மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முன்று கட்ட பரிசோதனைகள் அவசியம், ஏனென்றால் தடுப்பூசி எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாம் உணர வேண்டும், மேலும் அது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை நாங்கலும் காண வேண்டும் என்றார்..
இது மக்களிடையே பெரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் தடுப்பூசி ஆராய்ச்சியின் கட்டத்தைக் குறிக்கிறது.
சோதனைகளின் அனைத்து தரவையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். நிறைய பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, தடுப்பூசி செயல்படுகிறதா என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த கட்டத்தில் அது பயனுள்ள செயல்திறன் மற்றும் பாதுகாப்பின் அளவைக் கொண்டிருக்கிறதா இல்லையா என்பதற்கான தெளிவான சமிக்ஞை எங்களிடம் இல்லை என கூறினார்.
உலக சுகாதார அமைப்பும் கவி தடுப்பூசி கூட்டணியு இணைந்து கோவாக்ஸ் எனப்படும் உலகளாவிய தடுப்பூசி ஒதுக்கீடு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது, இது தடுப்பூசிகளை நியாயமான முறையில் வாங்கவும் விநியோகிக்கவும் உதவும். சுகாதாரப் பணியாளர்கள் போன்ற ஒவ்வொரு நாட்டிலும் அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தப்படுகிறது என குறிப்பிட்டு பேசினார்.