ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் அரசு செய்தி தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்துவருகிறது.தொடர்ந்து நடந்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசும்,தலீபான் பயங்கரவாத அமைப்பும் கடந்த செப்டம்பர் மாதம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.அதனை தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி தொடரும் நிலையில்,தலைநகர் பகுதியான காபூலில் நேற்று கோர தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த திடீர் தாக்குதலால் வாகனம் வெடித்து சிதறி தீப்பிடித்தது. உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர், அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமையும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஏற்கனவே, கடந்த டிசம்பர் 15 ம் தேதி காபூலின் துணை கவர்னர் மஹபூபுல்லா மொஹேபியை காரில் குண்டு வைத்து பயங்கரவாதிகள் படுகொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.