உலகிலேயே அதிக வயதான தம்பதியாக, ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக வயதான தம்பதியாக, ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த, 110 வயது ஜூலியோ மோராவும், அவருடைய மனைவி 104 வயதுடைய வால்ட்ராமினா குயின்டெரோஸ்-ம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஈக்வடாரின் குயிட்டோ பகுதியில் வசித்து வரும் இவர்கள் இருவரும், கடந்த 79 ஆண்டுகளாக இணைப்பிரியாமல், ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு 5 பிள்ளைகள் பிறந்துள்ளனர், அதில் அவர்களது மூத்த மகன் மட்டும் 58 வயதில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், 11 பேரக்குழந்தைகள், 21 பேரப்பிள்ளைகள் மற்றும் 9 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் கொண்ட, ஒரு பெரிய குடும்பம், இவர்களது குடிம்பம்.
1908-ஆம் ஆண்டு பிறந்த ஜூலியோ மோரா, உலகின் மூத்த மனிதர் என்றக் கின்னஸ் சாதனை படைத்தவர். இவரது மனைவி, வரும் அக்டோபர் மாதம், தனது 105-வது பிறந்தநாளைக் காணவிருக்கிறார். இந்த இணைப்பிரியாத காதல் ஜோடிக்கு மேலும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக, தற்போது உலகின் மிகப் பழமையான திருமணமான தம்பதியர் என்ற சாதனையையும் சொந்தமாக்கி உள்ளனர்.
ஜூலியோ மோரா, தனது சகோதரியின் திருமணத்தில் தான் தனது மனைவி குயின்டெரோஸை முதன் முதலில் சந்தித்தார் எனவும், சுமார் ஏழு வருட நட்பிற்குப் பின்னர், 1941-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி, அவர்கள் இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் திருமணத்துக்கு சம்மதிக்க மறுத்ததால், நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய உறவினர்கள் மட்டுமே, தங்களது திருமணத்தில் கலந்துகொண்டனர் என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருமே ஓய்வு பெறும் வரை, ஆசிரியர்களாக வேலை செய்துள்ளனர். இவர்கள் எங்கு சென்றாலுமே, ஒன்றாகவே செல்லும் வழக்கம் உடையவர்கள் என்றுக் கூறப்படுகிறது.
சாதனை தம்பதிகள் கூறுகையில், “அன்பு, குடும்ப ஒற்றுமை, மரியாதை, விட்டுக்கொடுத்தல், வேலை மற்றும் சரியானக் கல்வி ஆகியவையே ஆரோக்கியமான சுகவாழ்விற்கான திறவுகோல்கள்” என்று தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் பரவலால், குடும்பத்துடன் ஒன்றுக்கூட முடியவில்லை என்றும், மீண்டும் எப்போது ஒன்றினைவோம் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.