வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
லீ வான் த்ரி எனும் இளைஞர் எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றை பரப்பி உள்ளார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த எட்டு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று பரவல் குறைவாகவே இருந்தது. எனினும் டெல்டா திரிபு காரணமாக அங்கு சமீபத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
அந்த நாட்டில் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களின் 13,300க்கும் மேலானவர்கள் பலியாகியுள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் கடைசி சில மாதங்களில் மட்டும் நிகழ்ந்தவை. இதுவரை வியட்நாமில் கோவிட் பாதிப்புக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் ஹோ சி மின் சிட்டி நகரைச் சேர்ந்தவர்கள்.
இதன் காரணமாக ஹோ சி மின் சிட்டியில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணிப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் 28 வயதாகும் லீ வான் த்ரி, ஹோ சி மின் நகரத்திலிருந்து தமது சொந்த மாநிலமான கா மாவிற்கு ஜூலை மாத தொடக்கத்தில் வந்துள்ளார். ஜூலை மாதம் லீ வான், கா மா மாநிலத்திற்கு வந்தபொழுது வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயமாக 21 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என விதி இருந்தது.
ஆனால் அவர் சுய தனிமைப்படுத்தல் செய்துகொள்ளாமல் விதி மீறினார். ஆனால் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் சென்ற சமூக நல மையம் ஒன்றின் ஊழியருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. ஒரே நபரால் மட்டுமே இந்த தொற்று பரவியது என்பது நடத்தப்பட்ட நீதிமன்ற விசாரணையில் உறுதியானது.
இந்நிலையில் இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உடன் இந்திய மதிப்பில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.