ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி சுவர்களைக் கொண்ட பொதுக்கழிப்பறை மக்களை ஈர்த்துள்ளது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் ஜப்பான்காரர்களின் அணுகுமுறையும் பார்வையும் வித்தியாசமானதாக இருக்கும். பலரையும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு விஷயத்தைக் கூட அழகானதாக மாற்றும் திறமை அவர்களிடம் உண்டு.அவ்வகையில், பொது கழிப்பறைகள் குறித்த மக்களின் கருத்தை மாற்றும் நோக்கில், புதுமையான கழிப்பறைகளை அறிமுகம் செய்துள்ளனர்.
தலைநகர் டோக்கியோவின் வணிகப் பகுதியான ஷிபூயாவில் உள்ள இரண்டு பூங்காக்களில் கண்ணாடி சுவர்களால் ஆன, அழகான விளக்கு போல ஒளிரும் வெளிப்படையான பொது கழிப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன. வெளியில் இருந்து பார்க்கும்போது இந்த கழிப்பறைகள் வெளிப்படையாக தெரியும். யாரேனும் ஒரு நபர் உள்ளே நுழைந்தால் அது ஒளிபுகாதவாறு மாறும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சமாகும்.
கண்ணாடி தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், கழிப்பறை சுத்தமாக இருக்கிறதா என்பதை மக்கள் அடையாளம் காண முடியும். மேலும் தற்போது யாராவது உள்ளே இருந்தாலும் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை உருவாக்க பல முன்னணி வடிவமைப்பாளர்கள் உதவி உள்ளனர்.
“பொது கழிப்பறைக்குள் நுழையும் போது நாம் கவலைப்பட வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது தூய்மை, இரண்டாவது, யாராவது உள்ளே இருக்கிறார்களா என்பதுதான். தூய்மையையும், வெளியில் இருந்து யாராவது கழிப்பறையைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் பயனர்கள் சரிபார்க்க முடியும். இரவில், இந்த கழிப்பறை ஒரு அழகான விளக்கு போல பூங்காவை ஒளிரூட்டுகிறது.” என டோக்கியோ டாய்லெட் திட்டத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.