தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய, தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, தமிழகத்தில் பல தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் பலத்து வருகின்றன. ஆனால், இத்திட்டத்தால், 2030-ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் கல்வி சென்றடையும் எனவும், மும்மொழிக் கல்வியில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இருப்பினும், தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார். ஆகிலும், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆராய, குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அந்தக் குழுவின் ஆலோசனையின்படியே, புதிய கல்விக் கொள்கை குறித்து, அரசு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய, தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தக் குழுவில் சென்னை பல்கலைக்கழகம் முன்னாள் துணை வேந்தர்கள் தியாகராஜன், துரைசாமி ஆகியோரும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். துணை வேந்தர் பிச்சுமணியும், அழகப்பா பல்கலைக்கழகம் துணைவேந்தர் ராஜேந்திரன், திருவள்ளூர் துணைவேந்தர் தாமரைச்செல்வி, காமராஜர் பல்கலைக்கழகம் கிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.