இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் 29 ஆம் தேதி துவங்க இருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பலமுறை தள்ளி வைக்கப்பட்டு தற்போது அனைத்து சிக்கல்களையும் கடந்து இன்னும் சில நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இத்தொடர் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும். இதற்காக எல்லா அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றாகிவிட்டது.
மேலும் தற்போது எல்லா அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே தற்போது இந்த ஐபிஎல் தொடரில் யார் வெற்றி வாகை சூடுவார்கள் ? எந்த அணி பேட்டிங்கில் சிறப்பாக விளங்கும் ? எந்த அணி பந்து வீச்சில் பலம்படைத்த அணி ? தரமாக விளையாடி அனைத்து அணிகளுக்கும் இடையே கடுமையான போராட்டத்தை மேற்கொள்ளப்போகும்அணி எது ? என்பது குறித்த பல்வேறு தகவல்களையும் கருத்துக்களையும் ரசிகர்கள் மட்டுமின்றி சில முன்னாள் கிரிக்கெட்வீரர்களும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் இப்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார். இதைப்பற்றி அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : என்னை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனுபவம் மிக்க பல்வேறு வீரர்களை கொண்டுள்ளது. அதுவே அந்த அணிக்கு பெரிய பலமாக உள்ளது.

இதனில் குறிப்பாக தோனி,ராயுடு, டூப்ளெஸ்ஸிஸ்,வாட்சன் என பல்வேறு அனுபவம் உள்ள வீரர்கள் பேட்டிங் வரிசையில் இடம்பெற்றிருப்பதால் சென்னை அணி தொடரில் அதிக சக்திவாய்ந்த அணியாக திகழும் என நான் கருதுகிறேன். ஏனெனில் தற்போது ரெய்னாவின் இடத்தில் தோனி இறங்கினாலே சிஎஸ்கே அணி வலிமையை பெற்று விடும் . இதுமட்டுமின்றி இந்த அணியின் மிடில் ஆர்டரில் பிராவோ, சாகர்,ஜடேஜா, என பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக ரன்களை சேர்க்கும் தகுதி உடையவர்கள்.
இதுவே இந்த தொடரில் பேட்டிங் ஆர்டரில் மற்ற அணிகளை ஒப்பிடும்போது சிஎஸ்கே பல மடங்கு பலம் உள்ள அணியாக திகழ்வதாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே அவரது ட்விட்டர் பக்கத்தில் ஐபிஎல் அணிகளின் பேட்டிங் திறமையை வரிசை படுத்தி பதிவிட்டிருந்தார் அவர் வெளியிட்டிருந்த பதிவில் முதல் இடத்தில் சென்னையும், கடைசி இடத்தில் ராஜஸ்தான் அணியையும் இருப்பது குறிப்பிடத்தக்கது.




