பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தின் கீழ், ஏழை-எளிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வேளாண்மை துறை மூலம் அனுப்பப்படுகிறது.
இந்த திட்டத்தில் தகுதியற்ற பயனாளிகளை விவசாயிகள் என்ற போர்வையில் போலி ஆவணங்கள் மூலம் இணைத்து தமிழகம் முழுவதும் பெருமளவில் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த வங்கிகணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
Iசேலம் மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. ஆத்தூர் வேளாண்மைத்துறை சார்பில் ஆத்தூர் ஒன்றியத்தில் சுமார் 600 பேரை போலியாக இத்திட்டத்தில் சேர்த்து மோசடியில் ஈடுபட்டு வந்து இருப்பது அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஆத்தூர் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரியும் ராஜா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவரை அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்தனர்.
இதற்கிடையே, சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் என்ற போர்வையில் முறைகேடாக பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பதாகவும் புகார் எழுந்து உள்ளது. இதில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் என பதிவு செய்து முறைகேடாக நிதி பெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய வேளாண்மைத்துறை அலுவலகங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடந்த இந்த மாபெரும் மோசடி தொடர்பாக, 10 ஆயிரத்திற்கும் அதிகமான வங்கி கணக்குகளை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். அந்த கணக்குகளில் அரசு செலுத்திய பணத்தை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணையில், தனியார் கணினி மையங்களில் பயனாளிகள் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டதில் போலி ஆவணங்களை இணைத்து வெவ்வேறு மாவட்டங்களில் விவசாயம் செய்வதாக பதிவிட்டு மோசடி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன . இதனால் மாவட்டத்தில் உள்ள 20 வட்டார வேளாண் அலுவலகங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.