கோவையில், மழையால் சேதமடைந்த, பழமையான இரண்டு மாடிக்கட்டிட வீடு இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை பேரூர் செட்டி வீதி, கே.சி தோட்டம் பகுதியில் உள்ள பழமையான மாடிக் கட்டிடம், மழைக் காரணமாக திடீரென்று இடிந்து விழுந்தது. இதனையடுத்து, அருகில் உள்ளவர்கள், 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர், இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவனை, சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பின், சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்டனர். மேலும், 3 பெண்கள் உள்பட 5 பேரையும் காயங்களுடன் மீட்டு, 6 பேரையும் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஸ்வேதா என்ற 27 வயது பெண் மற்றும் கோபால்சாமி என்ற 70 வயது முதியவர் இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளது. காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், தொடர்ந்து அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




