அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதலமைச்சர் லட்சுமண் சவதி கூறியுள்ளார்.

கர்நாடகா :
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அரசு பேருந்துகளின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து சுமார் 3 மாதங்களுக்கு பிறகு அரசு பேருந்துகள் இயங்க தொடங்கின. பேருந்துகள் இயக்கப்பட்டாலும், கொரோனா பயம் காரணமாக பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்க அச்சப்படுகிறார்கள். இதனால் பேருந்துகளின் வழக்கமான பயணிகள் கூட்டம் பெரிதாக இல்லை.
இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதுகுறித்து துணை முதலமைச்சர் லட்சுமண் சவ்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நஷ்டத்தை தடுக்க வெளிமாநிலங்களுக்கு பேருந்துகள் போக்குவரத்தை தொடங்க அரசு முடிவு செய்து பிற மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.இதனை தொடர்ந்து பிற மாநில அரசுகள் அனுமதி அளித்தால் பேருந்துகள் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.




