Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home படைப்புகள்

நெருஞ்சி முள்…

September 12, 2020
– ஆனந்த பார்த்தீபன்

மாலை நேரம், யாருமில்லாத கடற்கரையோரம். ஜந்தாறு பேர் மட்டும் கடற்கரையில் நின்றுக்கொண்டு, காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

ரவிக்கு மனபாரம் இன்னும் குறைந்தபாடில்லை. காதலித்த பெண்ணோடு சென்னை வந்தவன், பதிமூன்று வருஷமாச்சு. அம்மா, தங்கச்சியை பார்க்க இதுவரை ஊருக்குப் போகவே இல்லை.

செய்தி அலை சிறுகதை போட்டி முடிவுகள்…

மனப் ‘பாங்கு’

வணக்கம் வாசக எழுத்தாளர்களே….

“நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்..? காதலிச்சது குத்தமா..? ஏன் என்னை அம்மா ஒதுக்குனாங்க..? சரியா பேசவுமில்லை.. ஏதோ மூணாவது மனுஷன மாதிரி தானே நினைச்சாங்க..? ஒரு சந்தோஷம் இல்லாத வீட்டில் இருக்கிறத விட, தனியா போறதுதான் சரின்னு இங்க வந்தேன்… இருந்தாலும்” அலைகள் அவ்வப்போது வந்து கால்தடவி ஆறுதல் சொல்லிவிட்டு சென்றன.

“அப்பா இல்லாத வீட்டுல நான் தானே எல்லாமே முன்னாடி நின்னு செய்யனும்..? பாவம்.. அங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆச்சோ என்னவோ..? அம்மாவுக்கு அந்த கழுத்து வலி எப்படி இருக்குதோ?

நினைக்கும் போதே முகத்தோல்கள் சுருங்கின. கண்களில் நீர்த்துளிகள் தேங்கின. தொண்டைக்குழியில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டதால், ‘லொக்’-கென்று இருமிக்கொண்டான்.

“இல்ல நான் செஞ்சதுதான் தப்பா..? பெத்தப் புள்ள கல்லுமாதிரி நான்  இருக்க, அங்க அம்மா என்ன கஷ்டப்படறாங்களோ..?! அம்மா கோபத்துல ஏதேதோ திட்டினாலும்.. கோழி மிதிச்சா… குஞ்சு சாகும்..? ஊரு பொண்டாட்டி பேச்ச கேட்டு ஓடியாந்துட்டான்னுதானே பேசும்..?!”

மனசாட்சியோடு, மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தான் ரவி. கடல் காற்றும், அவன் நினைவுகளை ஈரப்படுத்திக்கொண்டே இருந்தன.

அலைகளும், கரையை தொட பலமுறை முயன்றாலும், கடலுக்குள் செல்வதிலேயே கண்ணாக இருந்தது.

“சே..! நேத்து வந்தவளுக்காக, பெத்தவள தூக்கி எறிஞ்சிட்டேனே! என்னை வளர்த்து படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பா..? கல்லுடைச்சு, மரந்தூக்கி, கட்டிட வேலை செஞ்சு, காய்கறி வித்துச்சே! நான் ஒரு சுயநலவாதி. புத்திக்கெட்டுப் போச்சே… ஐயோ..”

தேங்கியிருந்த கண்ணீர், பெருமழையாய் பெருக்கெடுத்தது. கண்கள் இருண்டு, சிவந்துப் போயின. அக்கரையில் சூரியனும் கடலுக்குள் இறங்கத் தொடங்கினான். நண்டுகள் தன் வளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன. உப்புக் காற்றும், வெதுவெதுப்பான மணலும் அவன் சோகங்களுக்கு ஒத்தடம் கொடுத்தன.

இரவு மெல்ல தன் கரங்களை விரிக்கத் தொடங்கியது. மெல்ல எழுந்தான். கால்கள் இரண்டும் பின்னிக் கிடந்தன. தலைமுடி காற்றில் அலைக்கழிக்கப்பட்டிருந்தது. கன்னத்தின் மேடுகளில் கண்ணீர்… தான் வந்த சுவடுகளை விட்டு சென்றிருந்தது. எதையோ இழந்தது போலிருந்தது அவன் மனம். உடைகளில் ஒட்டிக் கிடந்த மணலை தட்டி விட்டான். சாலையோரத்தில் நின்றிருந்த தன் பைக்கில் ஏறி, வீடு நோக்கிப் புறப்பட்டான் ரவி.

“அம்மா அப்பா வந்தாச்சு” ரவியின் ஒரே மகள் ராணி.

“ஏன் இவ்வளவு நேரம்..? என்ன ஒரு மாதிரி இருக்கீங்க…உடம்புக்கு ஏதும் முடியலயா..?

மனைவி ரேகா பதறினாள்.

ரேகா, ரவிக்கு ஏற்ற சரியான ஜோடி. காதல் மனைவி. கல்யாணம் பண்ணியும் காதலர்களாகவே வாழும், கலியுக காதல் பறவைகள். ரேகா படித்தவள். கல்லூரிக் காலத்தில் இருவரும் கண்கள் பரிமாறி, இதயங்களை இடமாற்றிக் கொண்டவர்கள். ஜாதி வேற வேற என்றாலும், ரவிக்கு ஏற்ற ஒரு நல்ல பொஞ்சாதி. அவன் தளர்ந்துக் கிடக்கும் போதெல்லாம் தைரியமூட்டி முன்னேற வைத்தவள். கொஞ்சம் முன்கோபி. ஆனாலும் கணவனை விட்டுக் கொடுக்காத பதிவிரதை.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ போய் காபி போட்டுட்டு வா”

முகத்தை முழுதாகக் காட்டாமல் உத்தரவு போட்டான் ரவி.

“ராணி என்ன பண்ற..?”

“படிக்கிறேம்பா”

“என்னப் படிக்கிற..?”

“ம்ம். தமிழ் பா..”

“எங்க குடு பாப்போம்… என்ன பாடம்..?”

“உறவுகள் .. 2 ம் பாடம்.. பா”

“ஓ..ஓ எங்கச் சொல்லு பாப்போம்..

என் அப்பாவின் அம்மா பாட்டி…

என் அப்பாவின் சகோதரி அத்தை…

என் அப்பாவின் அப்பா தாத்தா…”

“சரிம்மா, நீ போய் தூங்கு… சரியா..?”

அவன் மனசு எதற்காகவோ ஏங்கியது. அது அந்த உறவுகளாகக் கூட இருக்கலாம்.

சாப்பிட்டப் பிறகு, படுக்கையில் கிடந்தான். தூக்கம் மட்டும் வர மறுத்தது. தாயின் ஏக்கம் இமைகளை சாத்த மறுத்தது. தலையில் ஏதோ ஒன்று விழுந்தது போலிருந்தது. தட்டி விட்டான், பல்லி ஒன்று குதித்தோடியது.

ரேகா…

ம்…

“காலையிலிருந்தே மனசு சரியில்ல… என்னவோ அம்மாவை பார்க்கணும் போலவே இருக்கு?

“என்னங்க என்னைக்குமே இல்லாம திடீர்னு..?” ஆச்சரியப்பட்டாள்,  ரேகா.

“என் அம்மாவோட முகமே மறந்துடும் போல இருக்கு. அம்மா இப்ப இருக்காங்களோ.. என்னவோன்னு பயமா இருக்கு”

முதன்முதலாக ரவி அழுவதை அப்போதுதான் ரேகா பார்க்கிறாள்.

“சே… என்ன குழந்தையாட்டம் அழுதுக்கிட்டு…… கண்டதையும் போட்டு நினைக்காதீங்க.. அம்மா அங்க நல்லாத்தான் இருப்பாங்க.”

“இல்லையே, நான் அனாதையா விட்டுட்டு வந்துட்டேனே”! மடியிலே முகம் புதைத்து அழுதான்.

“நாளைக்கே புறப்பட்டு, அம்மாவையும், தங்கச்சியையும் பாத்துட்டு, கூடவே கூட்டிட்டு வந்துருவோம். நீங்க இப்பக் கவலைப்படாம தூங்குங்க..” சமாதானப்படுத்தினாள்.

சாயங்காலம் ஆகியது, அவர்கள் நம்பியூர் வந்து சேர்வதற்கு. இன்னும் இங்கயிருந்து இன்னொரு பஸ் பிடிக்கணும், ரவியின் சொந்த ஊர் போவதற்கு.

“ஏங்க இளத்தூருக்கு எத்தனை மணிக்கு பஸ் வரும்?”

“சொல்ல முடியாதுங்க மழைக்காலம் வேற. இப்பத்தான் ஒரு வண்டிப்போச்சு. அடுத்தாப்ல பத்து, பத்தே காலுக்குத்தான்..”

இந்த நம்பியூர் ஒரு கிராமம். கிராமத்தின் மண்வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. அப்பவெல்லாம் இந்த நம்பியூர்லதான் சந்தை. சின்ன வயசுல ரவியும், அவன் அம்மாவும் சந்தைக்குப் போய்ட்டு வீடு வரும் போது மணி ஒம்பது, பத்தாயிரும். நம்பியூர்ல இருந்து இளத்தூருக்கு ஒரு குறுக்கு வழி இருந்தது.

அப்பவெல்லாம் அதுலதான வந்து போகணும். பஸ் வசதியெல்லாம் இப்பதானே வந்தது.! காய் கூடையை அம்மா சுமந்துக்குவாள். ரவி அம்மா கையை புடிச்சிட்டு, பொரியை தின்னுக்கிட்டு… கதை பேசிக்கிட்டே வருவான். சுத்தியும் முள் காடு, பனமரம், கத்தாழைச் செடின்னு ஒரே இருட்டா இருக்கும். திருடனுங்க அந்த காட்டுலதான் வந்து, திருட்டுப் பொருட்களை பாகம் பிரிப்பதா ஊர்ல சொல்லுவாங்க. ரவி.. கையில ஒரு கம்பு வச்சுக்குவான். அவனுங்க வந்து மறிச்சுட்டா..? அதுக்குத்தான் ஒரு தற்காப்பு. ஜான்பிள்ளை ஆனாலும், ஆண் பிள்ளை தானே!… அவன் அம்மாவும், அவன் தைரியத்தை ஊர்ல ஒரு பெருமையா சொல்லிட்டு திரிவாள்.

“ஏங்க.. இங்க ஒரு குறுக்குவழி இருந்துச்சே”

“அதெல்லாம் அந்தக் காலம் தம்பி. ஊர் நாட்டாமையும், அவன் மச்சானும் இடத்தை வளைச்சுப் போட்டு, விவசாயம் பண்ணிட்டு இருக்காங்க… இப்ப அங்க வழியே இல்ல…. தம்பி.”

ஊர் நாட்டாமை கொஞ்சம் மோசமானவன். ஜாதி வெறி புடிச்சவன். ரவியோட அப்பா, பஞ்சாயத்து தேர்தலுக்கு மனுதாக்கல் பண்ணுனாருங்கிறதுக்காக, ரோட்டுல ஓட ஓட வெட்டுனவன். குடும்பத்தையே ஊர விட்டு ஓதுக்குனாங்க. அப்ப ரவி கைக்குழந்தை..

“ரேகா. பத்து மணிக்குத்தான் பஸ்ஸாம்.. நாம ஏதாவது சாப்டுட்டு வந்துரலாம் வா..”

பனையோலையால் கட்டப்பட்ட ஓட்டல். இரண்டு அழுக்கேறிப்போன டேபிள். உள்ளே முழுக்க அடுப்புப் புகை ஆக்ரமித்திருந்தது. உட்காரும் பலகை, மேலும் கீழும் சீஸா மாதிரி ஆடியது.

“என்ன சாப்பிடுறீங்க?” கடைக்காரன் கேட்டான்.

“ஒரு அஞ்சு தோசை மட்டும் போடுங்க”

கூட்டமில்லாத ஊர் என்பதால், வந்தவர்களை நன்றாகவே கவனித்தான், அந்த ஓட்டல் கடைக்காரன். சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.

“ரேகா, டைம் ஆச்சு. பஸ் வந்துரும்… பஸ் ஸ்டாண்டுல போய் நின்னுக்கலாம்.”

கையில இருந்த பையை சரிபார்த்துக் கொண்டான். காலையில அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் வாங்கியப் புடவை. ஒரு வேளை தங்கச்சிக்கு கல்யாணம் ஆயிருந்தா, மச்சானுக்கு பேண்ட், சட்டை. மருமகனிருந்தா அவனுக்கு துணி, திண்பண்டம்.. எல்லாமே சரியாகத்தான் இருந்தது.

பேருந்து நிலையம். ஒரே ஒரு கம்பு மட்டும் ஊன்றப்பட்டிருந்தது. உட்கார ரெண்டு வட்டக்கல் மட்டும் இருந்தது. இரண்டு பேரைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

பக்கத்துல சாக்கடை. தாய் பன்றியை சுற்றி ஒரு பத்து, பன்னிரெண்டு குட்டிகள். தாய் மீது ஏறிக்கொண்டு சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தன.

இளத்தூர் காரங்க, பெரும்பாலும் ஏழே கால் மணி வண்டியிலேயே, வேலையை முடிச்சுட்டு, போயிருவாங்க. அப்புறம் இந்தக் கடைசி வண்டியில், மீறிப்போனா ஆறேழு பேர்தான் இருப்பாங்க.

லேசா தூரலடித்துக் கொண்டிருந்தது. ராணியை நெஞ்சோடு சேர்த்து, புடவையால் மூடிக்கொண்டாள், ரேகா.

யாரோ ஒரு ஆள். அமைதியாய் வந்துப் பக்கத்தில் நின்றான். வயசு 32-க்குள் தான் இருக்கும். ஆள் உருவமே பார்த்தால் பரிதாபமாய் இருந்தது. ஒரு அழுக்கடைந்த பேண்ட், சவரஞ் செய்யாத முகம், உழைத்து உழைத்துக் களைத்துப்போன தேகம்.

அவன் முகம், ஏதோ ஒரு சோகத்தில் அவன் இருப்பதை உணர்த்தியது.

“என்னங்க இளத்தூருக்கா?” ரவி மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்தான்.

“ஆமாம்.”

“பஸ் பத்தே காலுக்குனாங்க… ஒண்ணும் வரலயே…!”

அவன் ஏதும் பேசவில்லை. மற்றவரிடம் பேசும் மனநிலையில் அவன் இல்லை.

ராணிக்கு குளிர் காற்று ஒத்துக்கவில்லை. அவ்வப்போது இருமிக் கொண்டே இருந்தாள்.

“ஏங்க உங்களுக்கு சொந்த ஊர் இளத்தூரா? நான் உங்களைப் பார்த்ததே இல்லையே..?” ரவிதான் அவனிடம் கேட்டான்.

“இல்லைங்க”

என்னடா, இவன் ஒரே வரியில பதிலை சொல்லிட்டு இருக்கான்னு.. ரவி சலிச்சுப்போய் இனிமேல் அவன் கூட பேச்சே கொடுக்கக் கூடாதுன்னு முடிவெடுத்துக்கொண்டான்.

தூரத்தில் ரெண்டு பல்பு மட்டும் தெரிந்த வெளிச்சத்தில், பஸ் வருவதை மூவரும் புரிந்துக் கொண்டார்கள். கம்பத்திற்கருகே வண்டி நின்றது. மூவரும் ஏறினார்கள்.

பஸ்சுக்குள் மீறிப்போனா எட்டுப் பேர்தான் இருப்பார்கள். அதுல ஒருத்தன் நல்லா குடிச்சுட்டு, பின்னாடி சீட்டுல மல்லாக்கா கிடந்தான். வேட்டி அவிழ்ந்து, படிக்கட்டுக்கருகே வெளியே போவதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது.

“2 இளத்தூர்”

“15 ரூபாய்”

டிக்கட்டை வாங்கிக்கொண்டான் ரவி.

“இந்தாப்பா டிக்கெட்”

அந்த சோக ஆசாமி கேட்காமலேயே டிக்கட்டை கிழித்துக் கொடுத்தார் கண்டக்டர். எப்பவும் இதே வண்டியில் வருவதால், கண்டக்டருக்கு மனப்பாடம் ஆகியிருந்தது.

“ஏம்பா… ஆத்தாளுக்கு இப்ப எப்படி இருக்கு?” கண்டக்டர் அந்த ஆசாமியிடம் கேட்டார்.

“மோசமாயிட்டு தாங்கண்ணா இருக்கு.. தினமும் இந்த மருந்து தரலேன்னா, இளப்பு வந்து மூச்சு விட முடிய மாட்டேங்குது..” வாங்கிய மருந்தைக் காட்டினான். கண்டக்டர் அவன் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்வது போல், ‘உச்’ கொட்டினார்.

கண்டக்டருக்கும் ஆத்தாளை நல்லாவேத் தெரியும். வேலை முடிச்சுட்டு இந்த வண்டியிலதான் ஏறி போவா.. ம்… அறுபது வயசுவரை அசராம கூலி வேலை செஞ்சவ அந்த ஆத்தா.

“இளத்தூர் இறங்குங்க”

ரவியும், ரேகாவும் மெல்ல இறங்கினார்கள். ராணி தூங்கிப் போயிருந்தாள். அந்த ஆசாமியும் இறங்கினான்.

எதிரே.. கருப்பராயன் சாமி சிலை. கையிலே கத்தி, கண்ணிலே கோபமுடன் இருந்த சாமியைப் பார்த்து, பயந்து போனான். இவனுடைய குல தெய்வம் அது.

“வந்துட்டியா வா.. வா..” ன்னு சொல்லி மிரட்டுவதுபோல தெரிந்தது அவனுக்கு.

புதுசு புதுசா சில வீடுகள் அங்கே முளைத்திருந்தன. இவன் வீடு கருவேல முள்செடி தாண்டி., இருபது அடி நடக்கணும். நல்ல இருட்டு.

அந்த சோக ஆசாமி, அவர்களுக்கு முன்னே ஒரு நாலடி தூரத்தில் சென்றுக் கொண்டிருந்தான்.

“ஓ, இவனும் நம்ம தெருதானா… யார் இவன்..? பார்த்ததே இல்லையே..!” ரவிக்கு அப்பவும் குழப்பம் தான்.

ஊரே அடங்கிப் போயிருந்தது. நாய்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

வீடு வந்துவிட்டது. ஆனால், அந்த ஆசாமி உள்ளே உரிமையோடு கதவைத் திறந்துச் சென்றான். இதைப் பார்த்து ரவிக்கு, இது நம்ம வீடுதானா என்று சந்தேகமே வந்துவிட்டது.

ரவி வெளியே நின்று.

“என்னங்க. இது பொன்னம்மா வீடுதானே?”

“ஆமா நீங்க யாருன்னு.:?”

“நான் அவங்க மகன்”

அந்த ஆசாமிக்கு என்னவோ போலாகியது.

“வாங்க.. வாங்க… உள்ளே வாங்க”

“நீங்க யாரு?” ரவி கேட்டான்.

“நான் தான் அவங்க மருமகன். உங்க தங்கச்சியைக் கட்டுனவன். அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“தங்கச்சி எங்கே?”

அவன் மச்சானால் பதில் சொல்ல முடியவில்லை. திடீரென்று சோகமானான்.

“அதுவந்து, பிரசவத்துல பாவி என்னைய விட்டுட்டு போயிட்டா… இறந்து நாலு வருசமாகுது” அழுதான்.

இவனுக்கு இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. ரவியின் கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. சமாதானப்படுத்தினார்கள் இருவரும்.

“என் அம்மா எங்கே?” என்று கதறினான் ரவி.

இவன் கைத்தாங்கலாக ரவியை உள்ளேக் கூட்டிச் சென்றான். கயித்துக் கட்டிலில் மூட்டையாக்கப்பட்ட அழுக்குத்துணி போல் கிடந்தாள், அவன் தாய்.

“அம்மா”. வாயிலிருந்து அவனுக்கு வார்த்தைகள் சரியாக வரவில்லை. 13 வருடமாக பார்க்காத சூரியனை, அப்போதுதான் பார்க்கிறான்… ஆனால்..

அம்மா என்ற அவன் பாசக் கூப்பாட்டை, அவளால் கேட்க முடியவில்லை. அவள் முகம் வெளிரிப் போயிருந்தது. கண்கள் சொருகிப் போயிருந்தது. நாடிகள் நின்றேப் போயிருந்தன.

ஆம்… அவள் இறந்து, சிலமணி நேரம்தான் ஆகியிருக்கும்..

– கதைப் படிக்கலாம் – 33

இதையும் படியுங்கள் : அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர் ஹோஸ்டஸ் பேயும்!!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அயல்நாட்டு அகதி…

Next Post

மாதத் தவணையில் பிஎம்டபிள்யூ பைக் மாடல்கள்..விலை ரொம்ப கம்மி

Next Post

மாதத் தவணையில் பிஎம்டபிள்யூ பைக் மாடல்கள்..விலை ரொம்ப கம்மி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version