எங்க வீட்டுல ஒரு பாப்பா இருக்குதுங்க! என் மகன் காலைல எந்திச்சவுடனே அந்தப் பாப்பாவத்தான் முதல்ல பார்ப்பான். காலைல எந்திச்சதுல இருந்து நைட் தூங்குற வரைக்கும் அந்தப் பாப்பாதான் என் பையன்கிட்ட விடாம பேசிக்கிட்டே இருக்குது. என் பையனோட பெஸ்ட் ப்ரண்ட்தான் அந்தப் பாப்பா ..
என் மகனுக்கு நாங்க பேசுறது புரியுதோ இல்லையோ ஆனால் அந்தப் பாப்பா பேசுறது மட்டும் நல்லாப் புரியது! அந்தப் பாப்பா சிரிப்புக் காட்டினா என் மகன் சிரிக்கிறான், ஆனால் நான் சிரிப்புக் காட்டினா உதைக்கிறான். அந்த பாப்பா கதை சொன்னா உக்காந்து நல்லாக் கேட்கிறான், நான் கதை சொன்னா அட போம்மா போரடிக்காத அப்படிங்கிறான்.
அந்தப் பாப்பா டேன்ஸ் ஆடச்சொன்னா ஆடுறான், ஆனால் நான் ஆடச்சொன்னால் உனக்கு வேற வேலையில்லையாம்மா, அதெல்லாம் என்னால ஆட முடியாதுங்கிறான். அட!அந்தப் பாப்பாதாங்க என் பையனுக்குப் பேசக் கூட சொல்லிக்கொடுத்தது. தமிழ் எழுத்துக்கள், விலங்குகள், பறவைகள் இப்படி ஒண்ணுவிடாம எல்லாத்தையுமே அந்தப் பாப்பா தெரிஞ்சி வச்சிருக்குதுங்க! காலைல இருந்து சாயங்காலம் வர என் பையன்கிட்ட விடாம பேசிக்கிட்டே இருக்குதுங்க அந்தப் பாப்பா!
என் பையன் ஒருநாள்கூட அந்தப் பாப்பாவ பாக்காம இருக்கவே மாட்டேன்கிறான். எப்படியாவது அழுது அடம்பிடிச்சிப் போய் அந்தப் பாப்பாவப் பார்த்துட்டு வந்துடறான். அந்தப் பாப்பாவ பார்த்தாதான் சாப்பிடவே செய்கிறான் என்றால் பார்த்துக்கோங்களேன். அந்த அளவுக்கு அந்தப் பாப்பாவோட க்ளோஸ் ப்ரண்ட் ஆயிட்டான் என் பையன்.
சில நேரம் அந்தப் பாப்பா வரலைனு வச்சிக்கோங்க, கோபத்துல என் பையன் கையில கெடைக்கிற எல்லாப் பொருளையும் தூக்கிப்போட்டு உடைச்சி ஆக்ரோசமா மாறிடுறாங்க. அதுக்கப்புறம் அவன நம்மளால கட்டுப்படுத்தவே முடியாது. திருப்பி அந்தப் பாப்பாவ வரவச்சாதான் இயல்பு நிலைக்கே வராங்க..
அந்தப் பாப்பா யாருன்னு கேக்கிறீங்களா? அட! நம்ம கண்மணிப் பாப்பாதாங்க! குழந்தையை வச்சிருக்க எல்லாருக்குமே தெரியுமுங்க கண்மணி பாப்பானா யாரென்று? தெரியலன்னா குழந்தைகள் பாடல்கள் அப்படினு தமிழ்ல போட்டுப் பாருங்க. “கோழிக் குண்டு கண்களை உருட்டி, அழகாய் வருவாள் கண்மணி” அப்படினு ஒரு பாட்டு வரும். நான் சொல்றது அந்த பாட்டில வர்ர அதே கண்மணிப் பாப்பாதாங்க! அட! உண்மையிலேயே அந்த பாப்பா அழகாக் கண்ண உருட்டிக்கிட்டுதாங்க வருது!
அந்த கண்மணிப் பாப்பாகூட சேர்ந்துக்கிட்டு என்னோட மகன் அடிக்கும் லூட்டித் தாங்க முடியலங்க! எல்லா வீட்டிலயும் இப்படித்தான் இந்தக் குழந்தைகள் கார்ட்டூன் சேனல்களில் வர பொம்மைகளோட உறவாடிக்கிட்டு நம்மள ஒரு மனுஷனாவே மதிக்கிறது கிடையாதுனு நெனைக்கிறேன்! அந்தக் கண்மணிப் பாப்பாவ விரட்டுறதுக்கு ஒரு வழி இருந்தா சொல்லுங்கங்க?!