திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாமல் நிராகரித்த, கரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடியே, மூன்று லட்ச ரூபாயை ஒதுக்க மாவட்ட ஆட்சியருக்கு, அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி பரிந்துரை செய்தார்.
அந்த பரிந்துரையை ஏற்க மறுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதை எதிர்த்து செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை அரவக்குறிச்சி தொகுதி மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் மற்ற தொகுதிக்கு பயன்படுத்த முடியாது என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்க்கட்சி உறுப்பினர் என்பதனால் நிதி பயன்படுத்தப்பட வில்லையா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், கொரோனா சூழலில், செந்தில் பாலாஜியின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதிகளுக்கும் பயன்படுத்த வேண்டும் எனக்கூறி, தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தாமல் நிராகரித்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.