மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்.பி.பி அவர்களின் கலைப்பயணம் முடிந்து அவர் இறைவனடி சேர்ந்தார். அவரின் மறைவுக்கு பலரும் அவர்களின் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க தற்போது புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் சந்தித்தபோது கூறியது யாதெனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பாடல்களை பாடி புகழ் பெற்றவர் இசைக்கலைஞர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவர் அதன்பின் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். திரை உலகத்தினர் மட்டுமின்றி நாடே அவருக்காக அழுதது. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பணி மிகவும் சிறப்பானது. நான் அவருடன் பழகி இருக்கிறேன். ஏனாமில் 2020-ல் நடைபெற்ற கலாசார விழாவில் கலந்துகொண்டு நான், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விருது வழங்கி உள்ளேன். மிகச்சிறந்த பாடகரை நாம் இழந்துள்ளோம். அவரது இழப்பு கலை உலகம் மட்டுமல்ல, இசை உலகுக்கே மிகப்பெரிய இழப்பு. அவரது பணிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இவரின் மரணம் பலரையும் காயப்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இவருக்கு பாரத ரத்னா விருது புதுச்சேரி முதலமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க தரப்பட்டால் அனைவரும் ஆனந்தமாக இருப்பார்கள்.