நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனின் புதியபாதை இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி நடித்த புதிய பாதை திரைப்படம் 1989 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இதில் கதாநாயகியாக நடிகை சீதாவும், குணச்சித்திர கேரக்டரில் ஆச்சி மனோரம்மாவும் நடித்திருந்தனர்.
இந்த படத்துக்கு சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய 2 தேசிய விருதுகளும் கிடைத்தன. துணை நடிகைக்கான விருதை மறைந்த நடிகை மனோரமா பெற்றார். தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியருக்கான விருதையும் புதிய பாதை பெற்றது. புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் பார்த்திபன் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் பரவி வந்தன. இதில் கதாநாயகனாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன் அவர்கள், புதியபாதை இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்காக நடிகர் சிம்புவுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூடிய விரைவில் பதில் தெரியும் எனவும் கூறியுள்ளார், மேலும் தன்னுடைய உள்ளே வெளியே திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கும் சிம்பு தான் பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிம்பு தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.