ஹத்ராஸில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தைக் காண சென்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வடசென்னை காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசென்னை காங்கிரஸ் கட்சி சார்பில், பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் பாரிமுனையில் நடந்தது.
உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற, அவரது இல்லத்திற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்றனர்.
அப்போது இருவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மரியாதை குறைவாக நடத்தியதோடு, கைது செய்துள்ளனர்.
இதை கண்டித்து, பாரிமுனையில் வடசென்னை காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரவியம், வடசென்னை காங்கிரஸ் கட்சி பொருளாளர் ஷிப்பிங் டில்லிபாபு ஆகியோர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று, தி.நகரில் உள்ள பா.ஜ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., அரசை கண்டித்தும், உத்தரப்பிரதேச முதல்வரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஊர்வலமாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து, அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின் விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.