நாம் ஏற்கனவே இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல தேர்தல் என்றாலே சன்னதம் வந்தது போல ஆடத் தொடங்கி விடும் திமுக. தற்போது வழக்கத்தை விட அது கூடுதலாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் என்றாலே கோயமுத்தூர் பாதாம் அல்வாவை சாப்பிட்டது போல, தெம்பாகத் தயாராகி விடும் திமுக. இம்முறை வழக்கத்தை விட கூடுதல் எதிரிகளை எதிர்கொள்கிறது. எனவே அதற்கேற்றார் போல வியூகங்களை வகுத்து வருகிறது திமுக. சபரீசனின் பென் நிறுவனம் களத்திலிருந்து தகவல்களை எடுத்துத் தர, உளவுத்துறை தகவல்களையும் பெற்று வைத்திருக்கும் திமுக தலைமை மாவட்ட நிர்வாகிகள் மூலம் அதை உறுதி செய்து கொள்கிறது. வழக்கமான பாணியிலிருந்து விலகி முற்றிலும் வேறொரு பாணியை இம்முறை கையில் எடுத்திருக்கிறது திமுக. தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பது, மாவட்டச் செயலாளர்களை தொகுதிகளைப் பார்த்துக் கொள்ளச் சொல்வது, மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்களுக்கு தொகுதிகளைப் பிரித்துத் தருவது என இயங்கி வந்த திமுக இது எல்லாவற்றையும் கலந்து கட்டி, ஒரு புது பார்முலாவை உருவாக்கி இருக்கிறது.
2021 ல் கைவிட்டு போன மற்றும் பலவீனமான 100 தொகுதியை குறிவைக்கும் திமுக
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக மற்றும் கூட்டணி சேர்ந்து 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. அதிமுக, பாமக, பாஜக, உள்ளிட்ட எதிர்கட்சிகள் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதுவரை தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக திமுக ஆட்சியைப் பிடித்ததில்லை. இப்போது அதை சாதித்துக் காட்டி விட வேண்டும் என நினைக்கிறார் ஸ்டாலின். ஆட்சியில் மூன்றாம் ஆண்டை நிறைவு செய்யும் போதே வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகள் இலக்கு என தொண்டர்களுக்கு அறிவித்து, அதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என கட்டளையிட்டார். அதற்கான பின்புலப் பணிகள் வேகமெடுத்தன. களநிலவரங்கள் ஸ்டாலின் டேபிளுக்கு வந்தன. திமுக எம்.எல்.ஏக்களில் 25 பேரின் செயல்பாடுகள் பெரிய திருப்தி இல்லை என அறிக்கை வர இம்முறை அவர்களை மாற்றி விட்டு அதற்கடுத்த இடங்களில் உள்ளவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் மாவட்ட வாரியாகச் சென்று அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை முடித்து விட திட்டம் வகுத்து திமுக தலைமை செயல்பட்டு வருகிறது. மதுரை, சேலம், தஞ்சாவூர் என வாரம் ஒரு மாவட்டம் என சென்று வருகிறார் ஸ்டாலின்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் நலத்திட்டங்களை அறிவிக்க முடியாது என்பது கோடிக்கணக்கில் புதிய புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் வேகவேகமாக முடிக்கப்பட்டு திறப்பு விழாக்களும் காண்கின்றன. தந்தையும், தனயனும் ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரிந்து சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்துக் கணக்குகளும் தேர்தலை மனதில் வைத்தே ஓடுகின்றன.
களத்தில் வீரர்கள் அதிகம்
காரணம் இம்முறை களத்தில் வீரர்கள் அதிகம் நிற்கின்றனர். கடந்த முறை அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், தினகரன், சசிகலா அனைவரும் அதிமுகவில் இல்லையே தவிர, பாஜக ஒருங்கிணைத்துள்ள கூட்டணியில் இருக்கின்றனர். எனவே கடந்த முறை பிரிந்து கிடந்த வாக்குகள் ஒன்று சேரவே வாய்ப்புகள் அதிகம். பாமகவையும், தேமுதிகவையும் அதிகாரப்பூர்வமாக இணைத்து விட்டால் பலமான கூட்டணியாக அதிமுக உருவாக வாய்ப்புகள் அதிகம். கடந்த காலங்களை விட தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பாஜக பெற்றுள்ளதை மறுப்பதற்கில்லை. தேமுதிகவும், பாமகவும் பிடிகொடுக்காத போதும், “வா அண்ணாமலை நீ வருவனு தெரியும்” என்பது போல பாஜகவும், அதிமுகவும் கழுகுப் பார்வையுடன் காத்திருக்கின்றன.

திமுக கூட்டணியில் லேசான விரிசலுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. 200 தொகுதிகளை இலக்கு வைத்துள்ள திமுக இம்முறை வழக்கமாக ஒதுக்கும் தொகுதிகளையோ, அல்லது அதைவிட குறைவான தொகுதிகளையோ தான் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கத் திட்டம் வைத்திருக்கிறது.
இதை உணர்ந்தே, பெ.சண்முகமும், திருமாவளவனும் கூடுதல் தொகுதிகளைப் கேட்டுப் பெறுவோம் என இப்போதே அச்சாரமிடத் தொடங்கி விட்டார்கள். தங்களுக்கான களத்தை அவர்களும் இப்போதே தயாரிக்கத் தொடங்கி விட்டார்கள். ஏனென்றால் அப்போதுதானே போட்டியின் போது அடித்து ஆட முடியும்.
பாஜகவும், பாமகவும் இல்லை என்றால் அதிமுகவோடு சேருவதில் பிரச்சனை இல்லை என திருமாவளவன் பேசியிருக்கிறார். என் உயரம் எனக்குத் தெரியும் என மாநாட்டில் பேசியவருக்கு தன் உயரம் தெரிந்து விட்டது போல. எனவே தங்களைத் தகுந்த மரியாதையுடன் நடத்தும் கூட்டணியோடு வரத் தயார் என சமிஞ்கை கொடுத்து விட்டார். இப்போது பால், பழனிசாமியின் கோர்ட்டில் கிடக்கிறது.
இவர்களை எல்லாம் தாண்டி சீனியர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியிருப்பது விஜய்தான். அவரை பச்சா இன் பாலிடிக்ஸ், நேற்று வந்தவர் என வாய்க்கு வந்ததையெல்லாம் விமர்சனமாக வைத்தாலும் தங்களுக்கான தலைவலியாகப் பார்க்கின்றது திமுக. விஜய் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சிகளுமே நினைக்கின்றன.
கட்சி தொடங்கி, தனது முதல் பேச்சில் இருந்தே திமுகவை எதிர்த்து வருகிறார் விஜய். ஆனால் அதிமுக பற்றி எதையும் பேசுவதில்லை. திமுகவால் தமிழ்நாடு சீரழிந்து விட்டது என அடிக்கடி கூறும் விஜய் அதிமுக தமிழ்நாட்டை ஆட்சி செய்ததை வசதியாக மறந்து விட்டார்.

எனவே களம் கொஞ்சம் கடினமாக மாறி இருப்பதால் திமுக இம்முறை ஓவர்டைம் ட்யூட்டி பார்த்து வருகிறது. 2021 தேர்தலிக் திமுக மற்றும் திமுக கூட்டணி தோல்வியை சந்தித்த 75 தொகுதிகள் மற்றும் பலவீனமாக இருக்கும் தொகுதிகள் என மொத்தம் 100 தொகுதிகளை திமுக கண்டறிந்து களத்தில் இறங்கியுள்ளது. மதுரை சந்திப்பில் நிர்வாகிகளிடம் வாங்க ஒன் டூ ஒன் பேசலாம் என அழைத்திருந்தார். உடன்பிறப்பே வா என்ற பெயரில் ஸ்டாலினும், நிர்வாகிகளும் தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து கள நிலவரத்தை முக்கிய நபர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்து வருகிறார்.
சிவப்பு , ஆரஞ்சு , இளம் பச்சை , அடர்பச்சை
சட்டமன்ற தொகுதிகளை நான்கு நிறங்களாக பிரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒன் டு ஒன் ஆலோசனை நடத்தி வருகிறார். சிவப்பு , ஆரஞ்சு , இளம் பச்சை , அடர்பச்சை என நான்கு நிறங்களில் சட்டமன்ற தொகுதிகளைப் பிரித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சிவப்பு : கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்த தொகுதி , உட்கட்சி பிரச்சனை, தற்போது அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதி.
ஆரஞ்சு : கடுமையான போட்டி இருக்கும் தொகுதி, கவனம் செலுத்திப் பணியாற்ற வேண்டிய தொகுதி.
இளம் பச்சை : வெற்றி பெரும் தொகுதி
அடர் பச்சை -: நிச்சயம் திமுக வெற்றி பெறும் தொகுதி
முதற்கட்டமாக சிவப்பு நிறத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார் ஸ்டாலின். கடந்த நான்காண்டுகளில் தொகுதிக்கென எதுவும் செய்யாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 2021 ல் கைவிட்டு போன தொகுதிகளை திமுக வசம் கொண்டு வந்து வென்ற தொகுதிகளை தக்க வைத்து இம்முறை 200 என்ற இலக்கை அடைய அதிரடி வியூகங்களை அமைத்து வருகிறது திமுக. தேர்வுகளை நல்லபடியாக எழுதி விட்டதாகத் தான் மாணாக்கர்கள் நினைப்பார்கள். ஆனால் அதைத் திருத்தும் ஆசிரியர் கைகளில் தான் மதிப்பெண்கள் இருக்கிறது. பார்க்கலாம், ஐந்தாண்டு ஆட்சிக்கு வாக்காள ஆசிரியர்கள் என்ன மதிப்பெண் கொடுக்க காத்திருக்கிறார்கள் என.

————————————-