இந்தியாவின் பிரபல ஸ்டார்ட் டப் நிறுவனங்களில் ஒன்றான பாலிசி பஜார் அடுத்த ஆண்டு பங்கு சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ளது.
2021ம் ஆண்டிற்குள் 250 மில்லியன் டாலர் திரட்ட திட்டமிட்டுள்ளதாக பாலிசி பஜார் நிறுவத்தின் இணை நிறுவனர் யாஷுஷ் தகியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் 3.5 பில்லியன் டாலர் மதிப்பினை எட்ட வேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாலிசி பஜார் நிறுவனத்தில் ஏற்கனவே சாஃப்ட்பேங்க் குழுமம், டைகர் குளோபல், டென்சென்ட் ஹோல்ட்டிங்க்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த நிலையில் தற்போது பங்கு சந்தையில் நுழைந்து நிதி திரட்டுவதன் மூலம் உலகம் முழுக்க தனது சேவையினை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாலிசி பஜார் நிறுவனத்தினை இந்திய பங்கு சந்தைகள் மட்டுமல்லாமல், அன்னிய பங்கு சந்தையிலும் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிதி உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களை வெளி நாட்டு சந்தைகளில் அனுமதிப்பதில்லை என்றாலும், இந்தியா இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சில நிறுவனங்கள் அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக ஸ்விக்கி, ஓலா, பேடிஎம், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் இருக்கின்றன.
பாலிசி பஜார் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டால், யுனிகார்ன் நிறுவனங்களில் பங்குச் சந்தையில் இடம்பிடித்த முதல் நிறுவனம் என்ற பெயர் பாலிசி பஜாருக்கு கிடைக்கும். தற்போது பாலிசி பஜார் மாதத்திற்கு ஒரு மில்லியன் பாலிசிகளை விற்க உதவுகிறது. இந்த நிலையில் இந்த பங்கு வெளியீடு மூலம் மேற்கொண்டு நிறுவத்தினை விரிவுபடுத்த முடியும். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டிஜிட்டல் மோகத்தினால் இதற்கும் வரும் காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கலாம். ஆக இது முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவே அமையும்.