சோலார் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் முழுமையாக இயங்கும் வகையில் புதுச்சேரி விமான நிலையம் செயல்பட உள்ளது. இதனால், மாதந்தோறும் ரூபாய் 10 லட்சம் சேமிக்கப்பட உள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் அமைந்துள்ள விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத்துக்குச் சிறிய ரக விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்துக்குத் தேவையான மின்சாரத்தைச் சோலார் மூலம் தயாரிக்கும் உற்பத்தி நிலைய பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டு,சோலார் மூலமாக மின்சாரம் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி விமான நிலையம்
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ.2.8 கோடியில் விமான நிலைய ஓடுபாதை அருகே 500 கிலோவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. சோலார் மின் உற்பத்தி நிலையம் மிக உயர்ந்த பாலி கிரிஸ்டலின் சோலார் பி.வி பேனல்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தினமும் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
10 லட்சம் சேமிப்பு
புதுச்சேரி விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 7.2 லட்சம் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது முற்றிலும் சூரிய சக்தியால் இயங்குவதால் புதுச்சேரி விமான நிலையத்துக்கு மாதம் ரூ.10 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகிறது. இந்தியாவிலேயே முழுமையாக சோலாரில் இயங்கும் விமான நிலையம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.




